தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

73 0

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் அவ்வலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதியிடப்பட்டு தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், இலங்கையில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி ஊக்குவிக்கும் பொருட்டு தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தைத் தாபித்தல், அதன் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளை எடுத்துக்கூறல், அவற்றுடன் தொடர்புடைய அல்லது அவற்றின் விளைவான செயற்பாடுகளை விளக்கல் ஆகியவற்றை இந்த தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகச்சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கு இடையிலும் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஊக்குவித்து மேம்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய தேசிய கொள்கையொன்றைத் தயாரித்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தல், அனைத்துச் சமூகங்களுக்கு இடையிலும் புரிந்துணர்வு, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கு உதவக்கூடிய தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கொள்கைகளையும் செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தல், வேறுபட்ட சமூகங்களுக்கு உள்ளேயும் சமூகங்களுக்கு இடையேயும் ஏற்படக்கூடிய பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்குக் காரணமாக அமையக்கூடிய விடயங்களை கையாள்வதற்கான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்மொழிதல், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடும் அக்கறையுடைய தரப்பினருக்கு உதவியளித்தல், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்ளும் நோக்கில் ஏதேனும் சட்டத்தின் ஊடாகவோ அல்லது அரச கொள்கையின் பிரகாரமோ ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்புக்களால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கத்துக்கு உதவுதல் என்பனவே இச்சட்டத்தின் குறிக்கோள்களாகும்.

அதேவேளை இச்சட்டத்தின் பிரகாரம் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் (நல்லிணக்க அலுவலகம்) ஸ்தாபிக்கப்படவேண்டும் எனவும், அதன் தலைமையகம் கொழும்பில் அமைந்திருக்கவேண்டும் எனவும் சட்டமூல வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவ்வலுவலகத்தின் பணிப்பாணையை அடைந்துகொள்வதற்கு அவசியமான எண்ணிக்கையிலான பிராந்திய அலுவலகங்களை ஸ்தாபிக்கமுடியுமென அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நல்லிணக்க அலுவலகமானது அமைச்சரால் பெயர் குறிப்பிடப்பட்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற பதவிவழி உறுப்பினர் ஒருவரையும், அமைச்சரின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற 10 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். இருப்பினும் அந்த 10 உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும்போது நல்லிணக்க அலுவலகக் கட்டமைப்பு நாட்டின் பல்லினத்தன்மையைப் பிரதிபலிப்பதை உறுதிப்படுத்தல், உறுப்பினர்களாகப் பரிந்துரைக்கப்படுவோர் மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம், நல்லிணக்கம் மற்றும் சமூக ஒத்திணைவு, தேசிய ஒற்றுமை, முகாமைத்துவம், கருத்திட்டத் திட்டமிடல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகிய துறைகளில் அனுபவமுடையவர்களாக இருத்தல் மற்றும் அவர்கள் இச்சட்டத்தின் 5 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்படும் தகைமையீனத்துக்கு உட்படாதவர்களாக இருத்தல் என்ற 3 காரணிகள் விசேடமாகக் கவனத்திற்கொள்ளப்படவேண்டும். அமைச்சரின் பரிந்துரைக்கு அமைவாக உறுப்பினர் ஒருவரை நல்லிணக்க அலுவலகத்தின் தவிசாளராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. தவிசாளரின் பதவிக்காலம் நல்லிணக்க அலுவலகத்தின் உறுப்பாண்மைக் காலப்பகுதியாகக் காணப்படும்.

நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தல், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய தேசிய கொள்கையொன்றை வகுத்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்த உதவுதல், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய தேசிய செயற்பாட்டுத்திட்டமொன்றை வகுத்தல், இன, மத, மொழி, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளின் விளைவாக இன்னல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நபர்களை அடையாளங்காணல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு உள்ளிட்ட மோதலுக்குப் பின்னரான கரிசனைகளை எடுத்துரைத்தல், தேசிய ஒருமைப்பாட்டுக்கான தடைகளை அடையாளங்கண்டு, அக்கறையுடைய தரப்பினருடனான கலந்துரையாடல்களின் மூலம் அவற்றை நிவர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தல், நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி செயலாற்றிவரும் ஏனைய அமைச்சுக்கள், அரசாங்கத்திணைக்களங்கள், கட்டமைப்புக்களுடன் கூட்டிணைந்து பணியாற்றல் போன்றன இந்த அலுவலகத்தின் பணிகளாகும்.

மேலும், நல்லிணக்க அலுவலகமானது செயலகமொன்றைக் கொண்டிருக்கவேண்டும் என்றும், அவ்வலுவலகத்தின் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு அச்செயலகத்துக்கு வழங்கப்படவேண்டும் என்றும் இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பணிப்பாளர் நல்லிணக்க அலுவலகத்தினால் நியமிக்கப்படுவதுடன், அவர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் தகைமைகளையும் அனுபவத்தையும் உடையவராக இருக்கவேண்டும்.

அதேபோன்று நல்லிணக்க அலுவலக உறுப்பினர்களின் சம்பளங்கள் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் அதேவேளை நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் மானியக்கொடைகள் மற்றும் அறக்கொடைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நல்லிணக்க அலுவலகம் அதன் செயற்பாடுகளுக்கு அவசியமான நிதியைத் திரட்டலாம் என்றும் அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.