விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூல வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
மேற்குறிப்பிட்டவாறு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலத்தின் வரைபு கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி உங்களது அமைச்சினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டவரைபைத் தயாரிப்பதற்கான முயற்சிகளைப் பெரிதும் வரவேற்கும் அதேவேளை, 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 10(சி) பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள ஆணையை ஆணைக்குழு நிறைவேற்றுவதற்கு உங்களது அமைச்சினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பைப் பாராட்டுகின்றோம். இச்சரத்தானது புதிய சட்டங்களைத் தயாரிக்கும் பணிகளில், மனித உரிமைகளைப் பாதுகாத்து, மேலும் மேம்படுத்துவதற்கு ஏதுவான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான ஆணையை ஆணைக்குழுவுக்கு அளித்துள்ளது.
இச்சட்டமூலமானது விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின்கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். அதற்கமைய விசேட தேவையுடையோரின் உரிமைகளைப் பூரணமாக வழங்குவதற்கும், பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்குமான செயற்திறன்வாய்ந்த சட்டக்கட்டமைப்பை உருவாக்குவதை இச்சட்டமூலம் முன்னிலைப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் இச்சட்டமூலத்தை மேலும் வலுப்படுத்துவதை முன்னிறுத்தி சில பொதுவான பரிந்துரைகளை முன்வைக்கவிரும்புகின்றோம். அதன்படி குறிப்பாக ‘நியாயமான தங்குமிடம்’ என்பதற்கான வரையறையானது இவ்விடயத்தில் அரசுக்கு உள்ள கடப்பாட்டை நிர்ணயிக்கும் வகையில் செயற்திறன்மிக்கவாறு ஒருங்கிணைக்கப்படவேண்டும்.
அதேபோன்று விசேட தேவையுடைய பெண்கள் மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கின்ற பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கான தீர்வுகள் இச்சட்டமூலத்தில் விரிவாக உள்வாங்கப்படவேண்டும். வயது மற்றும் பால் அடிப்படையிலான பாகுபாடின்றி விசேட தேவையுடைய அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாட்டை முன்னிறுத்துவதாக அது அமையவேண்டும்.
மேலும் விசேட தேவையுடையோருக்கான தேசிய பேரவையின் அதிகாரங்கள் மற்றும் அப்பேரவைக்கான நியமன செயன்முறை என்பன உரியவாறான மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக குறித்த சட்டமூலம் தொடர்பான அவதானிப்புக்கள் மற்றும் முக்கிய சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகள் என்பனவும் அதில் உள்ளடங்குகின்றன.