முல்லைத்தீவு – சுதந்திரபுரத்திலும் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இன்று (26.09.2023) தாயக செயலணியின் ஏற்பாட்டில் சுதந்திரபுரம், நிரோஷன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.
பொதுச்சுடரினை முன்னாள் போராளி பார்த்தீபன் மாலினி ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகதீபம் திலீபனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் அஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்கள் பரிசில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், நடன நெறியாளர்களும் இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டு இருந்த போது, இராணுவத்தினர் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்கமுடிந்தது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூக செயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், வேலு தியாகராசா, சாம்பசிவம் உதயகுமார், திருநாவுக்கரசு பிணவன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.