யூனிடெக்கின் ரூ.125 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பரிவர்த்தனையில் அமலாக்கத் துறை நடவடிக்கை

67 0

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் யூனிடெக் நிறுவனத்தின் ரூ.125.06 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் குழுமம், அதன் விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அந்நிறுவனத்தில் வீடுகள் வாங்கியவர்களிடம் பண மோசடி செய்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கெனவே, யூனிடெக் குழுமம் மற்றும் அதன் தொடர்புடைய ஷிவாலிக் குழுமம், கார்னோஸ்டிக் குழுமம், திரிகார் குழுமம், ஷெல் நிறுவனங்கள், பினாமி நிறுவனங்கள் அதன் தொடர்புடைய இடங்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாகிகள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா, ரமேஷ் சந்திரா, ப்ரீத்தி சந்திரா, ராஜேஷ் மாலிக் ஆகிய 5 பேரை அமலாக்கத் துறை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில், மொத்தமாக யூனிடெக் நிறுவனம் ரூ.7,612 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், இதுவரை அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1,257.61 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இந்நிலையில், சென்னை நல்லம்பாக்கத்தில் யுனிடெக் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.125.06 கோடி மதிப்பிலான நிலத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முடக்கினர். இவ்வழக்கின் விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.