திருமலை கைத்தொழில் வலயத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை – இந்தியா நெருக்கமாக செயற்பட வேண்டும்

66 0

திருகோணமலையில் உள்ள கைத்தொழில் வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய, இலங்கை அரசாங்கங்கள் நெருக்கமாகச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  இரு நாடுகளுக்கும் இடையே படகு சேவைகளை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் , மும்பையில் ஒக்டோபர் 17-19 வரை நடைபெறவுள்ள உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டுக்காக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் கொழும்பில் கடந்த வாரம் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , கடல்சார் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்திய இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு தலைவர்களால் வெளியிடப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கடல் இணைப்பை மேம்படுத்துவதில் இரு அரசாங்கங்களும் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிபர், இந்த உச்சிமாநாட்டில் இலங்கைக்கு ‘பங்காளி நாடு’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு என்பது உலகளாவிய மற்றும் பிராந்திய கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதன் மூலமும் முதலீடுகளை எளிதாக்குவதன் மூலமும் இந்திய கடல்சார் பொருளாதாரத்தை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளரால் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் கடல்சார் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் இந்த நிகழ்வு வாய்ப்பளிக்கும் என்றும்,  இது வணிக தொடர்புகளுக்கு அதிக வணிகத்தை எளிதாக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, உலக கடல்சார் இந்திய உச்சி மாநாட்டிற்கு தன்னை அழைத்ததற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். கடல்சார் துறையின் வளர்ச்சிக்கு நெருக்கமான ஒத்துழைப்பு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பத்தைத் தழுவல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் இதன் போது வலியுறுத்தினார்.

இலங்கையில் துறைமுக அபிவிருத்திக்கான இந்திய முதலீட்டைப் பாராட்டிய அவர், திருகோணமலையில் உள்ள கைத்தொழில் வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு இரு அரசாங்கங்களும் நெருக்கமாகச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையே விமான இணைப்பை ஏற்படுத்துவதில் இந்தியா அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையே படகு சேவைகளை விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்தார்.