கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தின் கீழ் கடந்த 2022ஆம் மற்றும் கடந்த 2023ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக பயிர்செய்கைகளில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் நீர்வரிப் பங்குகள் மாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளருக்கு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் கடந்த 2022 ஆம் ஆண்டில் பெரும்போக அறுவடை நிறைவு பெற்றதன் பின்னரும் குளத்தில் முழுமையாக நீர் தேங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து 21ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இரணைமடு குளத்தின் கீழான நீர்ப்பாசன எல்லைப் பரப்பு தவிந்த கோரக்கண் கட்டு, பெரிய பரந்தன், குமரபுரம் ஆகிய பகுதிகளிலும் மானாவாரி வயற் காணிகளை கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசங்களுக்கு பரீட்சார்த்தமாக சிறுபோக செய்கைகளுக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கோரக்கண் கட்டு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கையில் நீதியற்ற முறையில் பாரபட்சமாகவும் சிறுபோக பங்குகள் வழங்கப்பட்டதாகவும் குறித்த பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் அதன் நிர்வாகத்தினரை சேர்ந்தவர்களை அவர்களது உறவினர்கள் மாத்திரமே ஒதுக்கீடு செய்த நிலப்பரப்பகளில் பயிர்செய்கை மேற்கொண்டதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த பிரதேச விவசாயிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் துறை சார்ந்த திணைக்களங்களுக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை அடுத்து இது தொடர்பில் மாவட்ட அரச அதிபரால் மேலதிக அரச அதிபர் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த விசாரணைகளில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து முறைகேடுகளில் ஈடுபட்ட விவசாய அமைப்புக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுபோக பயிர்ச்செய்கையின் போது இரணைமடுக்குளத்தின் கீழுள்ள புலிங்க தேவன் முறிப்பு கமக்கார அமைப்பினரால் சுமார் 716 ஏக்கர் வரையான சிறுபோக பங்குகள் பயிர்ச்செய்கை குழு கூட்டத் தீர்மானங்களுக்கு மாறாகவும் கமநல சேவை நிலையங்களுக்கிடையில் பங்கு மாற்றம் செய்யப்படாமலும் வெளியிடங்களுக்கு தண்ணீர்ப்பங்குகள் முறையற்ற விதத்திலே கொண்டு செல்லப்பட்டமை மற்றும் வாழ்வாதாரச் செய்கைகளில் ஈடுபட்டுவரும் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான பங்குகள் கமக்கார அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவை இரகசியமான முறையிலே பெருந்தொகை பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
அதாவது இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரச அதிபரால் ஏற்கனவே குழு ஒன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையிலும் மேற்படி தண்ணீர்ப்பங்குகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை குறித்த பிரதேச விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பங்குகளை வழங்காது அதனை தடுத்து விட்டு அதனை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை எனப் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.