முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம்

115 0

முல்லைத்தீவு – முள்ளியவளை, தண்ணீரூற்று பிரதான வீதியோடு இணையும் குறுக்கு வீதிகளை வெட்டி துண்டாடுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நீர்க்குழாய்களை மண்ணில் புதைப்பதற்காக வீதியின் குறுக்கே இவ்வாறான குழிகள் ஆங்காங்கே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான வீதியான நெடுங்கேணி – தண்ணீரூற்று மற்றும் முல்லைத்தீவு – மாங்குளம் வீதியின் இருமருங்கிலும் உள்ள இணைப்பு வீதிகளில் பாதசாரிகள் இந்த சவாலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

பிரதான வீதியின் அருகாக செல்லும் நீர்வழங்கல் குழாயிலிருந்து துணை இணைப்புக்கான சிறு நீர் வழங்கல் குழாய்களை இணைக்கும் போது வீதியை துண்டாடுகின்றனர். பிரதான வீதியுடன் குறுக்கு வீதி இணையும் இடத்திலேயே இந்த துண்டாடல் நிகழ்வதாக மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.

குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பயணிகள் துண்டாடப்பட்ட பாதையை கடக்கும் போது இடர்களை சுமக்கின்றனர்.

குறுக்கு வீதியும் பயணத்திற்கு ஏற்றால் போல் சீர்செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அதனை குறுக்காக வெட்டி துண்டாடி நீர்க்குழாய்களை பொருத்திவிட்டு மீண்டும் செப்பனிடுகின்றனர்.

 

ஆனலும் அவை வழமையான சீரான பாதையமைப்பை கொடுக்கவில்லை. ஈருருளிகள் மற்றும் உந்துருளிகள் பயணிக்கும் போது துண்டாடிய இடத்தில் ஏறி விழும் நிலையால் பயணத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

இவை பற்றி பயணிகள் சிலரிடம் கருத்துக் கேட்ட போது பயணிகள் விசனப்பட்டு கருத்துக்களை கூறியிருந்தனர்.

வீதியபிவிருத்தியின் போது நீர் வழங்கல் வடிகால் அமைப்பை கருத்திலெடுத்து திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தால் இப்போது வீதிகளை துண்டாடி அசௌகரியத்தை ஏற்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது என ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் இது பற்றி கருத்துரைத்திருந்தார்.

அவர் மேலும் கூறும் போது, ”வெட்டப்படும் இடங்களில் சரியான முறையில் அழுத்தம் கொடுத்து பாதை சீர் செய்யப்படுவதில்லை.

சீமெந்து கலவையை பயன்படுத்தும் போது வெட்டப்பட்ட இடங்களை அருகிலுள்ள பாதையமைப்புக்கு பொருந்துமாறு சீர்செய்து கொள்வதில் கவனமெடுப்பதாக தெரியவில்லை.

இப்போதுள்ள நிலையில் வெட்டப்படும் இடங்களில் திருத்தமாக வீதியை சரிசெய்தல் வேண்டும். அப்படி மேற்கொள்ளும் செயற்பாடுதான் பயணிகளுக்கு இயல்பான பயணிப்பு அனுபவத்தை வழங்கும்.

ஆயினும் இது பற்றி சுட்டிக் காட்டிய போதும் காது கொடுத்து கேட்பாரில்லை.” என தகவல் வெளியிட்டிருந்தார்.தண்ணீரூற்றில் பாதைகளுக்கு குறுக்கே வெட்டப்படும் நிலையை தேடிய போது பல இடங்களில் ஒரே மாதிரியான அவதானிப்புக்கள் கிடைத்துள்ளது.

இப்போதும் வெட்டப்படுதலும் சீரற்ற முறையில் மீள் பாதையிடலையும் அவதானித்ததோடு முன்னர் வெட்டிய இடங்களில் மேற்கொண்ட பாதையமைப்பு கீழிறங்கலுக்குள்ளாகி பாதையின் குறுக்கே பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளமையும் அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலாவத்தையில் பிரதான வீதியுடன் தீர்த்தப்பாதையை இணைக்கும் இணைப்பில் வெட்டப்பட்ட பாதை பல தடவை மீள் திருத்தத்துக்குட்பட்டிருந்தது.

முத்தையன்கட்டை ஒட்டுசுட்டானுடன் இணைக்கும் பிரதான வீதியில் சீமெந்து பாதையமைப்பு பகுதிகளில் பல இடங்களில் பாதையின் குறுக்கே வெட்டப்பட்டு நீர்க்குழாய்களை புதைத்து மீள் பாதையமைப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

இவை பயணம் செய்யும் போது ஏறிவிழுதல் எனும் பயணச்சிரமத்தை ஏற்படுத்துவதை அனுபவிக்க முவிவதாக தெரிவித்துள்ளார்.

பாதைகள் அமைக்கப்படுவதும் மக்களுக்காகவே! நீர்க்குழாய்களை பொருத்துவதும் மக்களுக்காகவே! இவையிரண்டையும் மக்களிலிருந்து பணியமர்த்தப்பட்ட ஊழியர்களே செய்து கொண்டுமிருக்கின்றனர்.

துறைசார்ந்த நிபுணர்களின் மேற்பார்வையில் நிகழும் இப்பணிகளில் குறைசொல்லும் சூழல் எப்படி ஏற்படுகின்றது?

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

 

பணிகளை முன்னெடுக்கும் போது உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.பணிகளை செயற்படுத்தும் போது அதீத கண்காணிப்பையும் பொது மக்களின் கருத்துக்களையும் கருத்திலெடுத்தல் வேண்டும்.

மக்களுக்கான தேவையை மக்களே செயற்படுத்துகின்றனர் என்ற சனநாயக கொள்கையை இப்போது இங்கே கருத்திலெடுத்தால் இந்த இடருக்கு பொருத்தமான தீர்வொன்று கிடைக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பொறியியல் பீட மாணவரொருவர் கருத்துரைத்திருந்தார்.