மத்திய முகமைகளின் சோதனைக்கு அதிமுக பயப்படாது என்றும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. அதை எதிர்கொள்ள பாஜகவும் தனது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து பேசி வருகிறது. அவ்வாறு கடந்த 14-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை, கூட்டணி தர்மத்தை மீறி விமர்சித்து வருவதாக கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. தொடர்ந்து, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசி இருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 18-ம் தேதி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மடியில் கனம் இருப்பவர்களுக்குதான் வழியில் பயம் இருக்கும். 1972 முதல் அதிமுக எத்தனையோ சோதனைகளை கடந்து வந்துள்ளது. ஜெயலலிதா மீதும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் கட்சியில் தொய்வு ஏற்படவில்லை.
எங்கள் கடமையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே அதிமுகவின் பணி. மத்திய முகமைகள் சோதனை போன்ற பூச்சாண்டிகளுக்கு அதிமுக பயப்படாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.