அதிகாரத்தை கைப்பற்றவே அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள். இனம், மதம் என்ற போர்வையில் இரத்தம் சிந்த வைக்கவே முயல்கின்றனர்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவார்கள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அதிகாரத்தை கைப்பற்றவே அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள். இனம், மதம் என்ற போர்வையில் இரத்தம் சிந்த வைக்கவே முயல்கின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும். நாட்டு மக்கள் என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் துன்பத்தையே அனுபவித்து வருகிறோம். நாட்டு மக்களே பயங்கரவாதிகளுடன் இனியும் தொடர்பு கொள்ளாதிர்கள்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் ஆகிய நீங்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவீர்கள். அதன் பிறகு இந்த நாடும் அழிந்து விடும்.
இன்று பௌத்த தேரர்கள் ஆலய குருக்கள் மௌலவிமார்கள் அல்லது அருட்தந்தைகளை அழைத்து அரசியல்வாதிகள் ஆசி வாங்கிக் கொள்கின்றனர்.
இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோக செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சர்வ மதத்தலைவர்களே நாட்டு ஒன்றிணைய வேண்டும். தொடர்ந்தும் ஏமாறக்கூடாது.
மேலும் நாட்டில் புதிய சட்டங்களை கொண்டு வந்து சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமையையும் இல்லாமல் செய்ய பார்க்கிறார்கள்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தினுடாகவும் அதுவே நடக்க இருக்கிறது.இதுபோன்று அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட வேண்டாம் என எனக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
எனது உயிருக்கும் இன்றும் கூட அச்சுறுத்தல் உள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தேன். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
நான் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்டிருந்தால் அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் நான் மக்கள் சார்பில் செயற்படுகின்றமையால் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போது பொலிஸில் எந்த முறைப்பாடுகளையும் நான் மேற்கொள்வதில்லை. அவர்கள் மீது இருந்த நம்பிக்கையும் சென்றுவிட்டது. இதுபோன்றே நாட்டு மக்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவற்றின் பின்னால் நிச்சயம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றார்.