காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் காவிரியிலிருந்து கூடுதல் தண்ணீரை எடுக்கக் கூடாது என்று கேரள அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு காவிரி தண்ணீர் எப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5ம் தேதி இறுதித் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம், கேரளா, தமிழக அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. புதுச்சேரி அரசும் இந்த வழக்கில் தன்னை இணைத்து மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்படும் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டனர். மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவும் முடியாது’’ என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டனர். அதுவரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து டிசம்பர் 15, 2017 ஜனவரி 4 மற்றும் பிப்ரவரி 7ம் ேததிகளில் விசாரணைக்கு வந்தபோதும் தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் தருமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 4 மாநிலங்களும் இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திரிவேதி ஆஜராகி, நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி வருகிறது என்று வாதிட்டார்.
இதைக் ேகட்ட நீதிபதிகள், காவிரி ஆற்றில் கேரள அரசு கூடுதலாக தண்ணீர் எடுக்கக் கூடாது என்று உத்தவாதம் தர வேண்டும் என்றனர். இதையடுத்து, கேரள அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் கூடுதல் தண்ணீர் எடுக்க மாட்டோம் என்று நீதிபதிகளிடம் உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள், “ காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே எங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசுக்கு கேரள அரசு அறிக்கை தர வேண்டும். வழக்கு ஜூலை 11ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அன்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும்” என்று உத்தரவிட்டனர்.
* காவிரி மேலாண்மை வாரியம் செயல்படும் போது அதற்கான விதிமுறைகளை தானே வகுத்துக்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. வாரியத்தின் அனைத்துச் செலவுகளும், தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் மாநில அரசுகளுடையதாகும்.
* தமிழ்நாடு-40%, கர்நாடகா-40%, கேரளா-15%, புதுச்சேரி-5% செலவிடவேண்டும். அணை, தடுப்பணைபோன்ற கட்டுமானங்கள், மின் அமைப்புக்கள் போன்ற அனைத்தும் அந்த வேலை எங்கு நடைபெறுகிறதோ அந்த மாநிலத்துக்குரிய செலவாகும்.