விகடன் நிறுவனத்தில் 50 பேர் திடீர் பணிநீக்கம் – எம்யூஜே கடும்கண்டனம்

164 0

ஆனந்தவிகடன், ஜூனியர்விகடன் உள்ளிட்ட பல ஏடுகளை வெளியிட்டுவரும் விகடன் நிறுவனத்தில் ஏறத்தாழ 50 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம்(MUJ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

விகடன் நிறுவனத்தில், மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 50 ஊழியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகளைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து பணியில் இருந்து விலகிக் கொள்வதாகக் கடிதம் எழுதித் தரும்படி விகடன் நிறுவனத்தின் மனித வளத்துறை நெருக்கடி கொடுத்துள்ளது. இதேபோன்று கொரோனா காலத்தில் 170 க்கும் மேற்பட்ட ஊழியர்களை விகடன் நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

ஊழியர்களை பணி நீக்கம் செய்வது பொருளாதார தூக்குத் தண்டனை என தீர்ப்பு ஒன்றில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இப்படி ஊழியர்களின் குடும்பச்சூழல் மற்றும் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்ளாமலும், உழைக்கும் பத்திரிக்கையாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்றாமலும் திடீர் திடீரென பணி நீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்கு உரியது.

பாரம்பரிய பத்திரிகை நிறுவனமாக விகடன் உயர்ந்து நிற்பதற்காக உழைத்த பத்திரிகையாளர்களையும் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யும் போக்கைக் கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டங்களையும் ஊடக அறத்தையும் பின்பற்றி தற்போதைய பணி நீக்கத்தை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்துகிறது.

எல்.ஆர்.சங்கர்
தலைவர்

வ.மணிமாறன்
பொதுச்செயலாளர்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.