போர்க்குற்ற விசாரணையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்த்து மனித உரிமைகள் பக்கம் நிற்க வேண்டும். இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான நடவடிக்கைகள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்து சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் திமுக ஆரம்பம் முதல் உறுதியாக இருந்து வருகிறது. அதற்காக தொடர்ந்து போராடியும் வருகிறது.
ஈழத்தமிழர்களின் நலன் காக்க டெசோ மாநாட்டை டெல்லியிலும், சென்னையிலும் நடத்தி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் 14 தீர்மானங்களை 12-8-2012ல் நிறைவேற்றி, அந்த தீர்மானங்களை நான் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஆகியவற்றிற்கு நேரடியாக கொண்டு சென்று கொடுத்திருக்கிறேன். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு உடனிருந்தார்.
இந்நிலையில் 22-3-2017ல் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மேலும் 2 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கலாம் என்ற தீர்மானத்தை அமெரிக்காவும், இங்கிலா ந்தும் கைகோர்த்துக் கொண்டு வருவது, தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்ப தால் அதிர்ச்சியளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசார ணைக்கு எத்திசையிலிருந்து அழுத்தம் வந்தாலும், எவ்விதத்திலும் இலங்கை அரசு ஒத்து ழைக்க மறுப்பது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மட்டுமல்ல சர்வ தேச அரங்கில், மனித உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.
ஈழத்தமிழர்களின் மீதான இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் உள்ளிட்டவை குறித்த விசாரணைக்கு மேலும் கால அவகாசம் அளிக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருந்து அழுத்தம் திருத்தமாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஐ.நா. மன்றத்தின் உத்தரவுக்கு இலங்கை அரசு கட்டுப்பட மறுப்பதும், அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கைகொடுப்பதும் அகில உலக மனித உரிமைகள் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்தியாயமாக ஆகிவிடும். ஆகவே போர்க்குற்ற விசாரணையை மேலும் 2 வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று நாளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆணித்தரமாக எதிர்த்து, மனித உரிமைகளின் பக்கம் நின்று வாதிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை கேட்டுக் கொள்கிறேன்.
வரலாற்றை கொச்சைப்படுத்தும் மனித உரிமை மீறல்களுக்கும், ஈழத்தமிழர்களின் மீது அத்து மீறி நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் காரணமான இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய விசாரணையில் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.