ஹரக் கட்டா தப்பிச் செல்ல முயன்ற சம்பவம், மேலும் இருவர் கைது

127 0

போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா, குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகரான நதுன் சிந்தக்க என்ற ஹரக் கட்டா தப்பிச் செல்வதற்கு உதவிபுரிந்ததாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிளுக்கு மகிழுந்தை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே இந்த இருவர் மாத்தறை, வெலிகம பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கான்ஸ்டபிளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து மகிழுந்தில் அழைத்துசென்ற சம்பவம் தொடர்பில் முன்னதாக இரண்டு சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஹரக் கட்டா கடந்த 10 ஆம் திகதி அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோதிலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

எனினும், அவரை தப்பிக்கவைக்க உதவி புரிந்ததாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், அன்றைய தினம் அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் சீசீரிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.

அதனூடாக காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, குறித்த காவல்துறை உத்தியோகத்தர், அங்கிருந்த தப்பிச்சென்ற மகிழுந்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.