சென்னை நகரில் ஏழை-எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், குறைந்த செலவில் உணவு உண்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை துவக்கி வைத்தார். இந்த உணவகங்களில் காலை நேரத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லியும், ரூ.5க்கு பொங்கல் மற்றும் காய்கறிகளுடன் சாம்பார் வழங்கப்பட்டது. மதிய நேரங்களில் எலுமிச்சை, புளி, தயிர் மற்றும் கீரைகளுடன் கலந்த சாதங்கள் ரூ.5க்கு வழங்கப்பட்டன. இரவு நேரங்களில் ₹3க்கு சப்பாத்தி மற்றும் பருப்பு கூட்டு வழங்கப்பட்டது. இதன் சுவை கீழ்தட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டன. இந்த அம்மா உணவகங்களின் சிறப்பை கண்டு மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக சமூகநலத்துறை அதிகாரிகள் இந்த அம்மா உணவகங்களை கண்காணித்து, அவற்றுக்கு தேவையான ஊழியர்களை நேரடியாக நியமித்து, திறம்பட நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சியே ஏற்று நடத்த அனுமதிக்க அரசிடம் மேயர் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் துரிதகதியில் சுமார் 200 அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டன. அதன்பின் இந்த அம்மா உணவக பணியாளர் நியமனம், சம்பள பணத்தில் கமிஷன், அரிசி, காய்கறி, தயிர் மற்றும் பருப்பு கொள்முதல், சப்ளை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாநகராட்சி அதிகாரிகளின் துணையுடன் ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகளும் கவுன்சிலர்களும் புகுந்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கினர்.
இதனால் இந்த அம்மா உணவகங்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல், தற்போது அமுதம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்த வகையில் மாநகராட்சி வட்டாரங்கள் கோடிக்கணக்கான ரூபாய் கடனை நிலுவையில் வைத்திருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். இதற்கடுத்த வாரம் சென்னை நகரை வர்தா சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பெரும்பாலான அம்மா உணவக கட்டிடங்கள் சின்னாபின்னமாக சரிந்ததுடன், அதன் வருவாய் முற்றிலும் முடங்கிப் போய் மக்களிடையே பரிதாபமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறுகையில், ‘கடந்த வர்தா புயலின்போது திருவான்மியூர், அவ்வை நகர் பிரதான சாலை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மா உணவகத்தின் மேற்கூரைகள் உடைந்து சிதறின. இவற்றை சீரமைத்து தரும்படி கடந்த 3 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சென்னை மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாத இறுதியிலும் தவணை முறையில் பணம் தருகின்றனர். இவற்றையும் ஆளுங்கட்சியினர் சம்பள கமிஷனாக பறித்துக் கொள்கின்றனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை அம்மா உணவகங்களுக்கு இருந்த மரியாதை, தற்போதைய ஆளுங்கட்சி வட்டாரத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தினாலும், தமிழக அரசின் மிகுந்த கடன் சுமையாலும் காற்றில் கரைந்த கற்பூரமாக மாறிவிட்டது. இதே நிலை நீடித்தால், நாங்களும் மக்கள் நலப் பணியாளர்களை போல் வேலை இழந்து, நடுத்தெருவில் நிற்கவேண்டிய அவலநிலைதான் ஏற்படும்’ என்றனர். ‘அம்மா வழியில் நடப்பதாக கூறிக்கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்கள், அவர் கொண்டு வந்த அம்மா உணவகத் திட்டத்தை திறம்பட நிர்வகிப்பதில் என்ன தயக்கம்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். காலம் பதில் சொல்லும்.