இரட்டை இலை சின்னம் முடக்கம்? : தேர்தல் கமிஷன் இன்று முடிவு அறிவிப்பு

282 0

சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இருவருமே இரட்டை இலை சின்னம் கேட்பது, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் இரு தரப்பினரிடம் இன்று நேரில் விசாரணை நடத்துகிறது. இன்று மாலையே தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு, பதட்டம், எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியானது. அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்.  ஆனால் சசிகலா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டவர். அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இல்லை. இதனால் அவர் பொதுச் செயலாளர் பதவியை பெறுவதற்கு தயக்கம் காட்டினார். பின்னர் பொதுக்குழுவால், அவர் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அதிமுக இரண்டாக உடைந்தது.

ஓபிஎஸ் அணியினர், சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளராக தற்காலிகமாக பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டது கட்சியின் சட்ட விதிகளின் படி செல்லாது. இதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இது குறித்து சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அவர் அதற்கு பதில் அளித்தார். இந்த பதில் குறித்து புகார் கொடுத்த ஓபிஎஸ் அணியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அவர்களும் பதில் அளித்தனர். இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில், தங்களிடம் 12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் உள்ளனர். தொண்டர்கள் அனைவரும் எங்களிடம்தான் உள்ளனர் என்றும் கூறியிருந்தனர். இதனால், சசிகலா அணியும் தங்களிடம்தான் அதிகமான தொண்டர்கள், 122 எம்எல்ஏக்கள், 37 எம்பிக்கள் உள்ளனர். நாங்கள்தான் உண்மையான அதிமுக. எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுடன் 6 ஆயிரம் தொண்டர்கள் தனித்தனியாக மனுவும், 6 லட்சம் பேரின் கையெழுத்தும், 40 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதற்கான ஆவணங்களையும் இணைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவைத் தொடர்ந்து இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு விவாதம் செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். அதில், தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மைத்ரேயன் எம்பியுடன் ஹரீஸ் சால்வே, பாலாஜி, ராகேஷ் சர்மா, பரணீதரன் ஆகிய மூத்த வக்கீல்கள் கலந்து கொள்கின்றனர். சசிகலா அணி தரப்பில் சல்மான் குர்ஷித், மோகன் பராசரன் மற்றும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இரு தரப்பினரும் தங்கள் வாதங்களையும், ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் முன்பு எடுத்து வைக்கின்றனர். தேர்தல் ஆணையம் இரு தரப்பு ஆதாரங்களையும் பரிசீலித்து இன்று மாலையே முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாளை(23ம் தேதி)யுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. இதனால் தேர்தல் ஆணையம் இன்றே தனது முடிவை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறும்போது, ‘‘இரு தரப்பினரும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த ஆவணங்களை இன்று ஒரே நாளில் படித்து பார்த்து தீர்ப்பு அளிக்க முடியாது. அதற்கு கால தாமதம் ஆகும். இதனால், இரட்டை இலை சின்னம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க முடியாது. அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இருவருக்குமே தனித்தனி சின்னங்கள் வழங்கலாம். தேர்தல் ஆணையம் ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுத்த பிறகு சின்னம் யாருக்கு என்பது தெரியவரும். அதேநேரத்தில் பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் இன்றே தனது முடிவை அறிவிக்கும்’’ என்று தெரிவித்தனர்.

* அதிமுகவை  1972 அக்டோபர் 17ல் எம்ஜிஆர் தொடங்கினார்.  1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை அதிமுக சந்தித்தது.
* அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் தனது சின்னமாக இரட்டை இலையை தேர்வு செய்தார். இதை அப்போதைய மதுரை கலெக்டர் சிரியாக் ஒதுக்கினார். மாயத்தேவர் வெற்றி பெற்றதால் அதுவே அதிமுகவின் நிரந்தர சின்னமாக மாறியது.
* எம்ஜிஆர் மறைவுக்குபின் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
* 1989 பேரவை தேர்தலுக்கு பின் இரு அணிகளும் ஒன்றாகி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா வசம் அதிமுகவும், இரட்டை இலையும் வந்தன.