லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் ஆட்சேப மனு கையளிக்கப்பட்டது

314 0

தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் திரைப்படக் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் கையெழுத்திட்ட ஆட்சேப மனு ஒன்று இன்று (மார்ச் 21) கையளிக்கப்பட்டது. துணைத் தூதுவர் ரகாலி அவர்களை நேரில் சந்தித்த இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராஜ், பத்திரிகையாளர் பா.ஏகலைவன், குறும்பட இயக்குநர் வீ.மு.தமிழ்வேந்தன், இணை இயக்குநர் ஆனந்த் ஆகியோர் அந்த மனுவை அளித்தனர்.

அந்த ஆட்சேப மனுவில் இயக்குநர் பாரதிராஜா, விக்கிரமன், எஸ்.பி.ஜனநாதன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு, மனோஜ்குமார், மோகன்ராஜா உள்ளிட்ட திரைப்பட இயக்குநர்களும், சத்யராஜ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட நடிகர்களும்,பி.கண்ணன் முதலான ஒளிப்பதிவாளர்களும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பின் (பெப்சி) செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜெயாமேனன், குணசேகரன், கார்த்திகைச் செல்வன், டி.எஸ்.எஸ். மணி, தியாகச்செம்மல், ஸ்ரீதர், தமிழ்மகன் உள்ளிட்ட பத்திரிகையாளர்களும், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் தாமரை, ஓவியர் டிராட்ஸ்கிமருது ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

மலேசியத் துணைத் தூதுவரகத்தில் கொடுத்த ஆட்சேப மனு

மலேசிய அரசே!
இனப்படுகொலை செய்த இலங்கைக்குத் துணை போகாதே!
நீதியைத் தண்டிக்காதே!
லீனாவை விடுதலை செய்!

தமிழினப்படுகொலை குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட
மனிதவுரிமை ஆர்வலர் லீனாஹென்றி மீதான வழக்கைக் கைவிடும்படி
தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களான நாங்கள்
மலேசிய அரசை அன்புடன் வலியுறுத்துகிறோம்.

மார்ச் 20. 2017
சென்னை

சென்னையிலுள்ள மலேசியத் துணைத்தூதுவரக உயர் ஸ்தானிகர் அவர்களுக்கு வணக்கம்.
2009ல் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பை அம்பலப்படுத்தியதில், ஆவணப்பட இயக்குநர் கல்லம் மேக்ரேவின் பங்களிப்பு மிக மிகக் குறிப்பிடத்தக்கது. மேக்ரே இயக்கி பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படம் இலங்கை ராணுவத்தின் கொலைவெறியாட்டத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் – என்கிற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் தான் நடத்திய இனப்படுகொலையை மூடிமறைக்க இலங்கை செய்த சூழ்ச்சியை முறியடிப்பதாக மேக்ரேவின் ஆவணப்படம் இருந்தது. அதனால் சர்வதேச தளத்தில் அதை முடக்க இலங்கை அரசு எல்லா வகையிலும் முயன்றது. தனக்குச் சாதகமான நாடுகளின் அரசுகளிடம் பேசி அவர்களது நாடுகளில் அந்தப் படம் திரையிடப்படுவதைத் தடுத்தது. அதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அந்த ஆவணப்படத்தைத் திரையிட்டனர். இந்தியாவில் அது தடை செய்யப்பட்டிருந்தும் இங்கும் அதைப் பலமுறை திரையிட்டிருக்கிறோம்.

மலேசியாவில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான லீனா ஹென்றி ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் திரையிட்டார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் வருகிற 22ம் தேதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது. சகோதரி லீனாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் சுமார் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அண்மையில் வெளியாகியிருக்கிற இந்தச் செய்திகள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கையைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முயலும் மலேசியா அந்தக் கொடுமையை அம்பலப்படுத்திய ஓர் ஆவணப் படத்தைத் திரையிட்டதற்காக லீனாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பது நீதியையும் நியாயத்தையும் கொச்சைப்படுத்துகிற செயல். இது ஓர் அப்பட்டமான கருத்துச் சுதந்திர மீறல். இதற்காக மலேசிய அரசை நாங்கள் கண்டிக்கிறோம்.

லீனா செய்தது பொய்ப்பிரச்சாரம் இல்லை. உண்மையில் என்ன நடந்தது என்பதை மலேசிய மக்களுக்கு உணர்த்தவே அவர் முயன்றிருக்கிறார். மற்றெல்லா நாட்டு மக்களையும் போலவே உண்மையை அறிவதற்கான சகல உரிமையும் மலேசிய மக்களுக்கு இருக்கிறது – என்கிற நம்பிக்கையிலேயே லீனா இதைச் செய்திருக்கிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் மலேசிய அரசுக்கு இருக்கிறது. சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தின் உயர் ஸ்தானிகரான உங்கள் வாயிலாக மலேசிய அரசுக்கு இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உலகறிய உண்மையைப் பறைசாற்றிய லீனா ஹென்றி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது – என்றும் அவர் மீதான வழக்கு கைவிடப்படவேண்டும் – என்றும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் மலேசிய அரசை வலியுறுத்துகிறோம்.