இலங்கை அரசாங்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டங்களையும் விலக்கிக்கொள்ளவேண்டும் என சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகியவற்றை சட்டத்தரணிகள் அமைப்பு கண்டித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து வெளியிடப்பட்ட பாரதூரமான அடிப்படை கரிசனைகள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு இந்த சட்டமூலங்களை தெளிவுபடுத்துவதற்கு நியாயப்படுத்துவதற்கான வெளிப்படையான பொறுப்புக்கூறும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை வலுவான மக்கள் கலந்தாய்வை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இரண்டு சட்டமூலங்களிலும் பயங்கரவாதம் -தவறான அறிக்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் – குற்றங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் மிகவும்பரந்துபட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்துவேறுபாடுகளை நசுக்குவதற்கும் சிவில் உரிமைகளை கட்டுப்படுத்துவதற்குமான ஆற்றலை கொண்ட இந்த ஆபத்தான சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சிகள் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நாட்டின் ஜனநாயகம் குறைந்தமட்டத்தில் உள்ளவேளை அச்சத்தை ஏற்படுத்தலாம் எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆழமான பொருளாதார நெருக்கடி அதன் காரணமாக தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் காரணமாக இந்த நாட்டின் மக்கள் தங்களது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் பொதுமக்களின் துயரங்களை செவிமடுப்பதற்கு பொதுமக்கள் அவர்களின் குழுக்கள் நலிந்துபட்டவர்களுடன் ஈடுபாட்டை பேணுவதற்கு பரந்துபட்ட தளமொன்று உருவாக்கப்படவேண்டும் என ஜனநாயகம் இந்த தருணத்தில் வேண்டுகோள் விடுத்து நிற்கின்றது எனவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நியாயபூர்வான உடன்பட மறுத்தல் விமர்சனம் -எதிர்ப்பு மற்றும் இலங்கையில் ஆட்சி முறை தொடர்பான பல்வேறு எண்ணங்கள் குறித்து அணிதிரளுதல் ஆகியவற்றிற்கு எதிரான சகிப்புதன்மையை இரு சட்டமூலங்களும் வெளிப்படுத்தியுள்ளன இது ஜனநாயகம் -சிவில் சுதந்திரம் -நிறைவேற்று அதிகாரம் கைப்பற்றுவதிலிருந்து பொதுமக்களின் இறைமையை பாதுகாப்பதில் நீதித்துறையின் பங்களிப்பு ஆகியவற்றிற்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலங்கள் இலங்கையின் குடிமக்களின் பரந்த அளவிலான சாதாரண நடவடிக்கைகளின் மீது அதிகப்படியான நிறைவேற்று அதிகாரத்தை நிறுவனமயமாக்கும் முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன”எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.