முல்லைத்தீவு கொக்கிளாய் சென் அன்ரனிஸ் மீனவர் சங்கத் தொழிலாளர்களிற்கு நீதி மன்றமே தடை போடாத நிலையில் நீரியல் வளத்திணைக்களம் அனுமதியை வழங்க மறுப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் முறையிடப்பட்டுள்ளது.
கொக்குளாய்ப் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கரைவலைத் தொழில் புரியும் பிரதேசத்திற்கு அண்மையில் அப் பகுதியைச் சேர்ந்த குறித்த சங்கத்துற்கும் வாடி அமைப்பதற்கான நிலம் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட பிரதேசமானது தமக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் அடங்குவதனால்குறித்த வாடி அமைப்பதை தடை செய்யுமாறு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் திணைக்களம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தது.
குறித்த வழக்கு கடந்த 15ம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதேச செயலாளரினால் நில அளவைத் திணைக்களம் ஊடாக அளவீடு செய்யப்பட்ட வரைபடமும் வழங்கப்பட்டு தென்னிலங்கை மீனவர்களிற்கு கரைவலைப்பாடு தொழிலுக்காக வழங்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து 371 மீற்றர்கள் தொலைவிலேயே வாடி அமைந்துள்ளதாக ஆவணம் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை ஆராய்ந்த நீதிபதி இந்த திணைக்களத்தின் ஆவணத்தின் பிரகாரம் குறித்த தென்பகுதி மீனவர்களிற்கான கரைவலைப்பாடு பிரதேசத்திற்குள் இல்லை என நிரூபனமாகின்றதே என கடல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரியபோது அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த தவணையில் அறிக்கை சமர்ப்பிப்பதாக கூடியதற்கினங்க வழக்கு எதிர்வரும் 3ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றம் தடை விதிக்காத காரணத்தினால் குறித்த சங்க அங்கத்தவர்கள் 12பேரின் படகுகளிற்கான காப்புறுதி செலுத்திய நிலையில் அனுமதியை பெறுவதற்கான ஏற்பாட்டுடன் கடற்றொழிலுக்காக இறக்கப்பட்டது . இரு நாட்கள் தொழிலில் ஈடுபட்ட சமயம் குறித்த படகுகளிற்கான அனுமதியினை வழங்க மறுக்கும் திணைக்களம். அப் பகுதியில் உள்ள படகுகளையும் கைது செய்யவே முற்படுகின்றனர்.
இவ்வாறு திணைக்களத்தினர் ஈடுபடுவது திணைக்களத்தின் பணிப்பாளர் தென்னிலங்கை மீனவர்களிற்காக செயல்படுவதன் வெளிப்பாடாகவே கருதுவதனால் குறித்த படகுகளிற்கான கொட்டு அனுமதிகளை பெறுவதற்கு ஆவண செய்து தருமாறு கோரும் மனுவே வட மாகாண முதலமைச்சரிடம் நேற்று முன்தினம் குறித்த சங்கப் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டுள்ளது.