ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசம் ; கானல் நீராகும் அரசியல் கைதிகளின் விடுதலை

322 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு 18 மாத கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்கவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதன்  இன்று காலை  பார்வையிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு மேலும் 18 மாதகால அவகாசம் வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்கனவே சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லையென அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.