தமிழகத்தில் 237 தொன்மையான கோயில்களில் திருப்பணிகள்

88 0

தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமயஅறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமை தாங்கி பேசியதாவது:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கைலாசநாதர் கோயில், விழுப்புரம் வளவனூர் கோணம்மன் கோயில், செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அய்யனார் கோயில், ஒரத்தநாடு சுந்தரவிநாயகர் கோயில், புதுக்கோட்டை இலுப்பூர் ஈஸ்வரன் திருக்கோயில், ஆலங்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில், திண்டுக்கல் கன்னிவாடி செல்லாண்டியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் கரிவரதராஜபெருமாள் கோயில், சேலம் ஓமலூர் வசந்தீஸ்வரர் கோயில், மேட்டூர் சக்தி பெரியமாரியம்மன் கோயில், கோவை சலீவன் வீதி யோக ஆஞ்சநேயசுவாமி கோயில், பொள்ளாச்சி கருப்பராயசுவாமி கோயில், ஈரோடு சத்தியமங்கலம் பகவதியம்மன் கோயில், பெருந்துறை அத்தனூரம்மன் பொடராயசுவாமி கோயில், கரூர் கிருஷ்ணராயபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், மணவாசி மத்தியபுரீஸ்வரர் கோயில், திருப்பூர் மடத்துக்குளம் உச்சிமாகாளியம்மன் கோயில், காங்கயம் காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை திருப்பத்தூர் சோழைகாத்த அய்யனார் கோயில்,காளையார்கோவில் காளியம்மன் கோயில், ராமநாதபுரம் எருமைப்பட்டி சித்தி விநாயகர் கோயில், திருவாடானை மகாலிங்கசாமி கோயில் உள்ளிட்ட 237 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார். இக்கூட்டத்தில் ஆகம வல்லுநர்கள், தொல்லியல் துறை வடிவமைப்பாளர்கள், கட்டமைப்பு வல்லுநர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.