காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை குறித்த தகவல்களைப் பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்தோம்

123 0

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்துவிட்டோம் என்று கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “நிஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய அரசுடன் பல வாரங்களுக்கு முன்னதாகவே பகிர்ந்து கொண்டோம். திங்கள்கிழமை வெளிப்படையாக இந்திய அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டை நான் முன்வைத்தேன். ஆனால் ஆதாரங்களை பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்துவிட்டோம். இந்தியாவுடன் இப்பிரச்சினையில் ஆக்கபூர்வமாக செயல்படவே விரும்புகிறோம். அவர்களும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். அப்போதுதான் இவ்விஷயத்தின் அடிஆழத்தை அறிய முடியும்” என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இப்பிரச்சினை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கூறுகையில், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்” என்றார்.

முன்னதாக, இந்தியா – கனடா மோதல் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசுகையில், “காலிஸ்தான் பிரிவினைவாதி பிரச்சினையில் சம்பந்தப்பட்டஇந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் சிறப்பு விலக்கு ஏதும் அளிக்கப்பட இயலாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கனடாவின் குற்றச்சாட்டுகளை உற்று கவனிக்கிறோம். காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.இருப்பினும் அமைச்சர் தரப்பில் இருந்துவந்த முதல் கருத்து பிளின்கனுடையது என்பதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது.