உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : மைத்திரியும் ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும்

82 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளும்,குண்டுத்தாக்குதலை தடுக்காத தரப்பினரும் ஒரு அணியில் இருக்கும் வரை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு நீதியை பெற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம்,தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிட்டதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு  நல்லாட்சி அரசாங்கம் தவறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய ஒருவர் என்பதை கூற வேண்டும். உயர்நீதிமன்ற வழக்கு தீர்ப்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் முறையாக பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை. பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு பிரதமரும் அழைக்கப்படவில்லை. தமது அரசியல் நோக்கத்திற்காக அதிகாரங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் பொறுப்பு கூற வேண்டியவர்களே. அவர்களின் கட்சி அரசாங்கத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. அவரின் கட்சி உப தலைவர் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்றார். எதிர்க்கட்சி பக்கத்தில் எனக்கு சில கதிரைகளுக்கு அருகில் இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி இந்த அரசாங்கத்தின் பங்காளியே.

இதேவேளை, நல்லாட்சியின்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதி தனக்கு அதிகாரங்களை வழங்காவிட்டால் எதற்கு அந்தப் பதவியை வைத்திருக்க வேண்டும். இப்போதும் அப்படிதான் நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை அவருக்கு ஜனாதிபதி பதவியே முக்கியம் என்று இருக்கின்றார்.இதனால் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதமரும் சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டும்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவரும் அரசாங்கத்திலேயே இருக்கின்றார். விசாரணை நடத்தும் அதிகாரிகளும் இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களே. இவ்வாறான நிலைமையில் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும். எவ்வாறாயினும் உண்மைகள் வெளியாகும் வரையில் மக்களின் பாதுகாப்பு நிச்சயமற்றதாகவே இருக்கும்.

சனல் 4 தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளதுடன், பாதுகாப்பு செயலாளர் சனல் 4 தகவல்களை நிராகரித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் அனுமதியை பெற்றா? பாதுகாப்பு செயலாளர் சனல் 4  வெளியிட்ட கருத்தை  நிராகரித்துள்ளார் என்று கேட்கின்றோம். அப்படியென்றால் எதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்பதாக கூற வேண்டும். இதனால் பாதுகாப்பு செயலாளரின் அறிக்கை எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வவுணதீவு சம்பவத்தை திசை திருப்பிய விசாரணை அதிகாரிகள் யார் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். புலனாய்வு தகவல்களுக்கு அப்பால் இதனை வழிநடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு  குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச நாடுகளின் குழுக்கள் வந்தன. எப்போதும் தாக்குதலில் சர்வதேச ரீதியிலான ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் என்று குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் புலனாய்வு அதிகாரிகள் எதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை பொறுபேற்குமாறு சின்ன சஹ்ரானுக்கு கூறினார்கள் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் வெற்றிக்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை ராஜபக்ஷர்கள் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.விடுதலை புலிகள் அமைப்புடனான யுத்தத்தை கொண்டே  மஹிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்றார்.அதன் பின்னர் யுத்த வெற்றியை கொண்டு 2010 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்றார்.அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி போட்டியிட்டார்.வெற்றிப் பெற்றார்.ஆனால் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார்.