பாராளுமன்றம் ஜனாதிபதி செயலகத்திற்கு அடிபணிந்து செயற்படக்கூடாது

111 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தலையிட ஜனாதிபதி செயலகத்துக்கு அதிகாரம் இல்லை.

பாராளுமன்றம் ஜனாதிபதி செயலகத்துக்கு கட்டுப்பட்டு நடக்க முடியாது என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (21) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது.

இதன்போது சபாநாயகர் தனது அறிவிப்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 2021,02,24ஆம் திகதி பாராளுமன்ற செயலாளருக்கு கையளிக்கப்பட்டது. அத்துடன் அந்த அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் பயன்படுத்த பாராளுமன்ற நூலகத்தில் வைக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.

அதேபோன்று விசாரணை அறிக்கையில் இருக்கும் சாட்சியாளர்களை பாதுகாக்கவும் அதன் இரகசிய சாட்சியங்கள் அடங்கிய தகவல்கள் பொது மக்களுக்கு வெளிப்படுத்த முடியாது.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் பயன்படுத்த முடியும் என 2023,09,12ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் மூலம் மீண்டும் அறிவித்திருக்கிறார் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தலையிட ஜனாதிபதி செயலகத்துக்கு அதிகாரம் இல்லை.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கையளிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியது செயலாளர் நாயகமாகும். அவ்வாறு இல்லாமல் அவர் ஜனாதிபதி செயலகத்திடம் கேட்கத் தேவையில்லை.

அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இரகசிய தகவல் இருப்பதாக தெரிவிக்கிறீர்கள். ஆனால் இந்த சாட்சியங்கள் அனைத்தும் திறந்த விசாரணை குழுவிலே தெரிவிக்கப்பட்டன. அப்படியானால் அந்த சாட்சியங்கள் எவ்வாறு இரகசியமான தகவல் என தெரிவிக்க முடியும். அதனால் பாராளுமன்றம் ஜனாதிபதி செயலகத்துக்கு அடிபணிந்து செயற்படக்கூடாது. பாராளுமன்றத்தின் கெளரவத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.