ஜனாதிபதி – பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு

129 0

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்றது.

இலங்கைக்கும் பொதுநலவாய செயலகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கடந்த வருடம் ருவண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை நிதியளித்தல் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் ஏனைய சவால்கள் குறித்தும் இங்கு உரையாற்றப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றை ஏற்படுத்துவதற்காக பொதுநலவாய நாடுகள் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் இலங்கை முன்னிலை வகிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புலம்பெயர் சமூகத்துடனான மல்போரா இல்ல கலந்துரையாடலின் முன்னேற்றம் குறித்தும் செயலாளர் நாயகம் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் மற்றும் பொதுநலவாய செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.