பதுளை வைத்தியசாலையில் 2022 இல் 40 சதவீதமானோர் மாரடைப்பால் உயிரிழப்பு

110 0

கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் பதுளை போதனா வைத்தியசாலையில் 40 சதவீதமானவர்கள் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையில் இதுவரை ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளை முன்னெடுப்பதில் தடங்கல்கள் காணப்படுவதாகவம் இதனால் ஊவா மாகாணத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாமல் போகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பதுளை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 1,883 பிரேத பரிசோதனைகளில் 770 மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டு மாத்திரம் பதுளை போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவு 2,500 இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில்  சிலருக்கு மாத்திரமே இதய ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆஞ்சியோகிராம் இயந்திரங்கள் பற்றாக்குறை காணப்படுவதால் சில இருதய நோயாளிகள் கண்டறியப்படாமல் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டார் வைத்தியர் பாலித ராஜபக்ஷ.

சில நோயாளர்கள் வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவர்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்படுகின்றது. சில நேரங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் போது இறந்துவிடுகிறார்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய நோய் உள்ளமை கண்டறியப்படாமல் இறந்துவிடுகிறார்கள் என்கிறார் வைத்தியர் பாலித ராஜபக்ஷ.

ஊவா மாகாணத்தில் உள்ள 1.5 மில்லியன் பேர் ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட ஏனைய மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளுக்கும் களுத்துறை மற்றும் நாகொட பொது வைத்தியசாலை, கராப்பிட்டி மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலம் தெரிவித்தார்.