ஓய்வுபெற்ற பெண் இராணுவ வீராங்கனையை டுபாயில் விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி: கைதான பெண் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

78 0

இலங்கை மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையில் செயற்படும் மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் தம்புத்தேகமவில் வைத்து ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு அனுராதபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் இராணுவ வீராங்கனையை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அனுப்பி அங்கு அந்தப் பெண் இராணுவ வீராங்கனையை விபச்சார தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.

ஓய்வுபெற்ற பெண் இராணுவ வீராங்கனை டுபாயில் இருந்த காலத்தில் இரண்டு முறை அங்குள்ள விபச்சார விடுதிக்கு செல்ல வற்புறுத்தப்பட்ட போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அத்துடன் தான் அங்கிருந்து இலங்கை திரும்புவதற்கு வேலைவாய்ப்பு நிறுவனமே பொறுப்பு என்றும் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பெண் இராணுவ வீராங்கனை கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பயணத்திற்காக செலவழிக்கப்பட்ட ஆரம்பத் தொகையான 5 இலட்சம் ரூபாவுக்கு கூடுதலாக 4 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இராணுவ வீராங்கனை பொலிஸ் மா அதிபருக்கு சம்பவம் குறித்து இராணுவ அதிகாரி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபர் தம்புத்தேகமவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் டுபாயிலுள்ள அவரது சகாவை கைது செய்வதற்கான  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.