கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு: கொடைக்கானல் விடுதியில் ஜெயக்குமார் முகாம்

117 0

முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி இல்லை எனவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். இது தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

தான் கொடைக்கானலில் இருப்பதை இணையதளத்தில் பதிவு செய்ததைதொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் அவரை சந்திக்க திரண்டனர். ஆனால் அவர் யாரையும் சந்திக்கவில்லை. விடுதியில் தங்கியிருந்து தனக்கு நெருக்கமான ஒருசில அரசியல் கட்சியினரிடம் மட்டும் ஜெயக்குமார் பேசி வருகிறார். தற்போது அவர் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் எனவும் உதவியாளர் தெரிவித்தார்.