அரசு மருத்துவமனைகளில் ‘முழு எண்டோஸ்கோபிக்’ முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு அரசு கவனம் செலுத்துமா?

119 0

முழு எண்டோஸ்கோபிக் முறை முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான கருவிகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்படுமா என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது.

முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்த அன்றே நடக்கக்கூடிய, மறுநாளே வீட்டிற்குப் போகக்கூடிய, ஒரு வாரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக்கூடிய ‘முழு எண்டோஸ்கோபிக்’ முதுகெலும்பு அறுவை சிகிச்சை (Full Endoscopic spine surgery), ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது.

‘எண்டோஸ்கோபிக்’ எனப்படும் நுண்துளை சிகிச்சைகள் இன்று அனைத்து வகை அறுவை சிகிச்சைகளையும் எளிமையாக்கிவிட்டன. தற்போது உடலின் அடிநாளமான முதுகுத் தண்டில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்கு ‘முழு எண்டோஸ்கோப் முதுகெலும்பு அறுவை சிகிச்சை’(Full Endoscopic spine surgery) வந்திருப்பது, முதுகெலும்பு முறிவு,
முதுமை, தசைவலுவிழப்பு போன்ற காரணங்களால் ஏற்படக்கூடிய முதுகெலும்பு வலி ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.

“மனிதர்களில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். நமது உடல் ஒரு கட்டிடம் என்றால், அதைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு கட்டமைப்பு முதுகெலும்பு. இந்த முதுகெலும்பைக் கொண்டுதான் உடலின் மற்ற உறுப்புகள் சீராக இயங்குகின்றன. கடந்த காலத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், 2 வாரம் படுத்தே இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு வருவதும் மிகவும் சிரமம். ஆனால், இந்த நுண்துளை எண்டோஸ்கோப் முதுகெலும்பு அறுவை சிகிச்சை, அதை மாற்றிவிட்டது. இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சிகிச்சை முடிந்த அடுத்த 4 மணி நேரத்தில் எழுந்து நடக்கலாம்; மறுநாளே வீட்டிற்குச் செல்லலாம். ஒரு வாரத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்” என்கிறார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற முதுகெலும்பு சிகிச்சைத் துறை தலைவரும், மதுரையில் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்பவருமான டாக்டர் ஏ .ராஜாமணி.

மேலும் அவர் கூறுகையில், “தலைவலி, காய்ச்சல் போல தற்போது முதுகுவலியும் பரவலாகிவிட்டது. எலும்பு தேய்வதாலோ, தசை வலுக்குறைவதாலோ, வயதானாலோ முதுகு வலி ஏற்படலாம். முதுகெலும்பு அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டாலோ கை, கால் வராமல் பிரச்சனை ஏற்படலாம். முதுகெலும்பு முறிந்து நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால் வராமல் போவதுதான் முக்கியமான
பாதிப்பு. எவ்வளவு வேகமாக அதனை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்துகொள்கிறமோ அந்த அளவிற்கு அது நல்லது. இதுவரை இதுபோன்ற பிரச்சினைகளுக்கு திறந்த வெளி முதுகெலும்பு அறுவை சிகிச்சையே நடந்தது. இந்த சிகிச்சையில் ஒரு வாரம் அல்லது 2 வாரம் படுத்தே இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். திரும்பி இயல்பு வாழ்க்கைக்கு வருவது மிகவும் சிரமம். முதுகெலும்பும் பலவீனமடையும்.

ஆனால், முழு எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் முதுகில் சிறு துளையிட்டு, அதன் வழியாக எண்டோஸ்கோப்பி கருவியை நுழைத்து முதுகெலும்பின் உள் அமைப்பைப் 10 மடங்கு டிவியில் பெரிதுபடுத்திக் காட்டி பாதிப்படைந்த நரம்பு மற்றும் சவ்வை மருத்துவர் சரி செய்கிறார். இந்த சிகிச்சையின்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இதில் இல்லை. அதனால், சிகிச்சை செய்த அன்றே நோயாளியால் நடக்க முடிகிறது. அடுத்த நாளே வீட்டிற்கு செல்லலாம். ஒரு வாரத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

இன்றைக்கு உள்ள அவசர உலகில் ஒரு சிகிச்சைக்கு ஒரு மாதம், இரண்டு மாதம் ஒய்வெடுக்க வேண்டும் என்று சொல்வது தண்டனை போன்றது. குடும்பத்தில் வருவாய் ஈட்டக்கூடியவராக நோயாளிஇருந்தால், வருவாய் இழந்து குடும்பம் பாதிக்கப்படும். அவர் சார்ந்த தொழிலின் உற்பத்தியும் பாதிக்கப்படும். இப்படி 10 பேர் இதுபோன்ற பிரச்சனைகளில் 2, 3 மாதங்கள் முடங்கினால் அது நாட்டின்பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

இந்த நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்தற்கு அதிநவீன கருவிகள் வேண்டும். அந்த கருவிகள் மட்டும் இருந்தால் போதுமானது இல்லை. அதனை கையாளுகிற மருத்துவர்களும் வேண்டும். இந்தியா முழுவதுமே 5, 6 மையங்களில் மட்டுமே இந்த முழு எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நடக்கிறது. இந்த சிகிச்சைக்கான கருவிகள் வாங்குவதற்கு மிகப்பெரிய முதலீடு தேவை. கருவிகளை கையாளுவதற்கான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தேவை. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நான் பணிபுரிந்தபோது, முதுகெலும்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிகிச்சைக்கு தனித்துறையைக் கொண்டு வந்தேன். தற்போது ‘எண்டோஸ்கோப்’ நுண்துளை முதுகெலும்பு அறுவை சிகிச்சையையும் மேற்கொள்கிறேன். பழைய முறையிலான திறந்தவெளி முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கும், முழு எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்குமான வித்தியாசம் என்பது, சாதாரண கார் ஒட்டுவதற்கும், வால்வோ பஸ் ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப்
போன்றது.

பெரும்பாலும் அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் முடங்கினால், இவர்களை சார்ந்த குடும்பங்களும் முடங்கிவிடுகின்றன. இதை தவிர்க்க, நவீனமுறை முழு எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை உதவுகிறது. இந்த சிகிச்சையில் ரத்த இழப்பு ஏற்படுவதில்லை. நோயாளிகள் அதிக காலம் மருத்துவமனையில் தங்க வேண்டியதும் இல்லை. அதிக நாள்களுக்கு ஓய்வு தேவையில்லை. வழக்கமான பணிகளைச் சில நாட்களில் தொடரலாம்” என தெரிவிக்கிறார்.

நன்மைகள் நிறைந்த இத்தகைய நவீன முழு எண்டோஸ்கோப் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகளை பரவலாக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அதற்கான கருவிகளைக் கொள்முதல் செய்யவும், பயிற்சி பெற்ற மருத்துவர்களை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.