நிதி பற்றாக்குறையில் சென்னை பல்கலைக்கழகம்: தீர்வு காண பதிவாளர் ஏழுமலை வேண்டுகோள்

134 0

சென்னை பல்கலைக்கழகம் கடுமையான நிதிப் பற்றாக்குறையில் தவிப்பதாகவும், இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் எனவும் அதன்பதிவாளர் ஏழுமலை கூறினார்.

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் சென்னை பல்கலை. பதிவாளர் ச.ஏழுமலை பேசியதாவது: சமுதாயத்துக்கு சிறந்த படைப்புகளை வழங்கிய கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாசென்னை பல்கலை.யில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.அதேநேரம் கடந்த 10 மாதங்களாக சென்னை பல்கலைக் கழகம்கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட சரியாக கொடுக்க முடியவில்லை.

பல்கலை.யில் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 226 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதேபோல், 1,400 அலுவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 600 பேர் மட்டுமே உள்ளனர். மூவர் செய்யும் பணியைஒருவரே செய்யும் நிர்பந்தம் நிலவுகிறது. இத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் சென்னை பல்கலை.நாக் மதிப்பீட்டில் ஏ பிளஸ் பிளஸ்அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

மேலும், இந்திய அளவிலும் தரவரிசையில் சிறந்த இடத்தைப் பெற்று கற்பித்தல் பணியில் 15 தலைமுறைகளாக சிறப்பான சேவையை சென்னை பல்கலை. வழங்கி வருகிறது. தாய் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலை.யின் நிதிப் பற்றாக்குறை பிரச்சினைக்கு உடனே தீர்வுகாணப்பட வேண்டும். இதை அரசின்கவனத்துக்கு தமிழறிஞர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிதி நெருக்கடி பற்றிய பதிவாளரின் திடீர் பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.