ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைப்படி விசாரணை

149 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்து சிபிஐ பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகம் எழுந்ததால் இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2017-ம் ஆண்டுஅதிமுக ஆட்சிகாலத்தில் உத்தரவிடப்பட்டது.

இந்த ஆணையம் கடந்த ஆண்டுஆக.23-ம் தேதி தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி தினமலர் நாளிதழின் வேலூர்–திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் மரணம் வரைபல்வேறு சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முழுமையான, நியாயமான விசாரணை நடத்த வேண்டியது அவசியம். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம், பல முக்கிய நபர்கள் மீது குற்றம் சாட்டியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பெரும்புலாவி ராதாகிருஷ்ணன் ஆஜராகி, இதுதொடர்பாக மனுதாரர் தரப்பில் ஏற்கெனவே சிபிஐக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என்றார்.

அதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தகுதியின் அடிப்படையில் சட்டப்படி பரிசீலித்து முடிவு எடுக்க சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.