சீக்கிய உரிமைச் செயற்பாட்டாளர் படுகொலை சூத்திரதாரிகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்

84 0

சீக்கிய உரிமைச் செயற்பாட்டாளரான ஹார்டீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலைச் சூத்திரதாரிகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று கனடாவின் டொரன்டோவை தளமாகக் கொண்டு செயற்படும் அரசியல் செயற்பாட்டாளரான ரோய் சமாதானம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் தமது இன மக்கள் சார்ந்து செயற்படுகின்ற உரிமைச் செயற்பாட்டாளர்கள் திடீரென படுகொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.

அண்மைக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த பரிதி பிரான்சில் இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தார்.

அந்தக் கொலையின் பின்னணி இன்னமும் வெளிப்படவில்லை. சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில், தற்போது கனடிய பிரஜையாக இருக்கும் 45 வயதான ஹார்டீப் சிங் நிஜ்ஜார் சீக்கிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறார். அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தினை மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் சக செயற்பாட்டாளர் என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறான நிலையில், குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் யார் என்பதை பகிரங்கப்படுத்தி, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளின் அரசாங்கங்களிடத்திலும் வலியுறுத்துகிறேன் என்றார்.