தமது வாழ்வாதாரத்தை இழந்து கடந்த ஆறு தினங்களாக போராடி வரும் கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜீவன் அடிகளார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் தமக்கான தீர்வினை வழங்க முன்வரவேண்டும் என பண்ணையாளாகள் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி ஆறாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு – சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரே மேய்ச்சல் தரை பிரச்சினை விளங்கவில்லையா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள். தமது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆறு தினங்களாக போராடி வருகின்ற போதிலும் இதுவரையில் தமது கோரிக்கையினை தீர்த்து வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளியிலிலும் மழையிலும் தாம் தமது வாழ்வாதாரத்தினை இழந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்க எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் வருகைதந்து தமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் போதே தமது போராட்டம் நிறைவுபெறும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரபல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜீவன் அடிகளார்,சிவில்ச மூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கொண்டிருந்தனர்.