காணி பிரச்சனைக்கு டிசெம்பருக்கு முன்னர் தீர்வு

80 0

வட மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசெம்பர் மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து காணிகளையும் தாங்கள் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம் என்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்தார்.

வனவள திணைக்களத்தின் கீழுள்ள விவசாய நிலங்கள் மற்றும் உரித்துடைய மக்களின் காணிகளே ஒப்படைக்கப்படும் என்று  குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் செயற்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளன. அந்த வகையில் விவசாய நிலங்கள், வீட்டு நிலங்கள் மற்றும் மக்களின் உறுதி காணிகள், அழிக்கப்பட்ட குளங்களைக் கூட மீள செப்பனிட முடியாத நிலைமையே உள்ளது.

எங்களுடைய பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களை செயற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தினாலே பிரச்சினைகள் பல தீர்ந்துவிடும்” என்றார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, “காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்க அதிபர் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதனால் இந்த விடயம் தொடர்பில் கவலைப்படத் தேவையில்லை. அனைத்து காணிகளையும் நாங்கள் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம். அதன்படி காணிகளுக்கான உரித்துகள் வழங்கப்படும்”  என்றார்.