நிறுவனங்களை மூட முடிவு செய்தால் அதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்

82 0

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதன் அமைச்சு தொடர்பான பொது செலவினக் குழு மறுஆய்வு அறிக்கையை மறுஆய்வு செய்யக் கோருவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, குறித்த குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிக்கை தயாரிக்கும் போது உரிய நிறுவனங்களின் கருத்துக்கள் பெறப்படாததாலும், விடயத்துக்குப்  பொறுப்பான அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்கப்படாததாலும் நேற்று செவ்வாய்க்கிழமை (19) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில்  மேற்படி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கோரிக்கைகளை நிதி அமைச்சு மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கூட்டம் நடைபெற்றது. குறித்த பொதுச் செலவின மீளாய்வுக் குழுவினால் அமைச்சின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

பொதுச் செலவின மறுஆய்வுக் குழு, நிதி பொருளாதாரம் மற்றும்  பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சினால் நியமிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செலவினங்களை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் திறைசேரி பிரதி செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க, நகர  அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் டாக்டர் எம்.எம்.எஸ்.எஸ்.பி. யாலேகம,  இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களான மொரட்டுவை பல்கலைக்கழக கட்டிடக் கலைப் பீடம் பேராசிரியர்  நகர மற்றும் நாட்டார் திட்டமிடல் துறையின் தலைவர் ஜகத் முனசிங்க, வரையறுக்கப்பட்ட துடாவே சகோதரர்கள் (பிரைவட் லிமிடட்),  சிரேஷ்ட பணிப்பாளர் அஜித் துடாவே, பட்டய நில அளவையாளர் நடுன் பெர்னாண்டோ ஆகியோர் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட குழு 14 முன்மொழிவுகளை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு, தேசிய இயந்திர நிறுவகத்தை கலைத்தல், கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தை கலைத்தல் அல்லது மறுசீரமைத்தல், நகரக் குடியிருப்பு  அபிவிருத்தி அதிகார சபையை கலைத்தல் அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலகாக பெயரிடுதல், பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் கடல்சார் சூழல்  பாதுகாப்பு அதிகார சபையை மிகவும் பொருத்தமான அமைச்சுக்கு மாற்றுதல், கண்ணிவெடி அகற்றுதல் அமைச்சின் வரம்பிற்கு உட்பட்டது அல்ல மற்றும் அது சம்பந்தப்பட்ட துறை அமைச்சின் கீழ் அமுல்படுத்துதல் உட்பட முன்மொழிவுகளை உள்ளடக்கியது. இந்தக் குழு அறிக்கை 08.08.2023 அன்று நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது பேசிய நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க, குழுவோ அல்லது குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சின் மேலதிக செயலாளரோ தனது நிறுவனத்தின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார். அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்காமல் தனது கருத்தின் அடிப்படையில் முன்மொழிவுகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தலைவர் குற்றம் சாட்டினார். குழுவோ அல்லது குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சின் மேலதிக செயலாளரோ தம்முடன் இது தொடர்பில் கலந்துரையாடவில்லை எனவும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சின் மேலதிக செயலாளரோ, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தன்னுடனோ அல்லது இராஜாங்க அமைச்சர்களுடனோ கலந்துரையாடவில்லை எனவும், குழுவின் அறிக்கை தொடர்பில் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார்.

இவ்வாறான நிறுவனங்களை நிறுவி மூடுவதற்கு அதிகாரிகளே முன்வருகின்றனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான விடயங்களில் அரசியல் அதிகார சபை தலையிடாவிட்டாலும், அதிகாரிகளின் தவறான தீர்மானங்களுக்கு அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சின் பிரதிநிதி குழுவில் உள்ளனர். அவர்கள் சரியாக வேலை செய்தால், அவர்கள் அவற்றை மூட வேண்டியதில்லை. அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் முதல் இராஜாங்க அமைச்சர்கள் வரை நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெரிவிக்காமல் இது போன்ற முடிவுகளை எடுப்பது தவறு.  எங்களுக்குத் தெரிவிக்காமல் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால், அதற்கு அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார்.

குறித்த குழுவின் பரிந்துரைகளை அமைச்சு ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இந்த முடிவை மீளாய்வு செய்யுமாறு அமைச்சரவையையும் நிதி அமைச்சையும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.