வவுனியா நகரசபைக்குட்பட்ட இடங்களில் உள்ள நடைபாதைகளை சிறு வியாபார நிலையங்கள் ஆக்கிரமித்துள்ளமையினால் பாதசாரிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து ஹொரவபொத்தானை வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி என்பன நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் விபத்துக்களை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து தமது வியாபாரத்தினை மேற்கொள்வதனால் பாதசாரிகள் வாகனங்கள் செல்லும் நடு வீதியில் நடந்து செல்லவேண்டியுள்ளது.
சன நெருக்கடி நிறைந்த அப்பகுதியில் பாதசாரிகளுக்கு பெரும் சிரமங்கள், சில வேளைகளில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இப்பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், அண்மைக்காலமாக நகரசபையும் தமது கண்காணிப்புக் கடமைகளை தளர்த்திக்கொண்டமையால் நாளுக்கு நாள் நடைபாதை வியாபாரிகளதும், வியாபார நிலையங்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.
எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்படாத வகையில் நகரசபை சிறந்த தீர்வினை காண வேண்டும் என வரியிறுப்பாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.