வவுனியா குளத்தின் அணைக்கட்டில் கல் குவாரி அமைக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

123 0

வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக கதிரவேலர் பூவரசன்குளம் கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் இன்று புதன்கிழமை (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையத்துக்கு முன்பாக அலுவலகத்தின் வாயிலை பூட்டி, அதன் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளக்கட்டு இயற்கையாக கற்பாறைகளை கொண்டமைந்த நிலையில், 12 அடி நீரை சேமிக்கக்கூடிய சிறு நீர்ப்பாசன குளமாக காணப்படுகிறது.

இந்த குளப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் கல்குவாரி அமைக்கப்பட்டு கல் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில், விவசாயிகள் குளத்தின் பாதுகாப்பு மற்றும் விவசாய செய்கைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம், வவுனியா பிரதேச செயலாளர், ஓமந்தை பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, கல் அகழும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த 15 நாட்களாக  இப்பகுதியில் மீண்டும் கல் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் குளத்தின் அணைப்பகுதி சேதமாகியுள்ளதாகவும், அதனை சீர் செய்ய முடியாது போயுள்ளதுடன், இக்குளத்தில் நீரை சேமிக்க முடியாமல் போகும் எனவும், 200 ஏக்கர் விவசாய நிலத்தினை விவசாயம் செய்யாமல் கைவிடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், கல்குவாரி அமைத்தவர்கள் மேலிடத்தில் இருந்து அனுமதியை பெற்று வருவதால் தாம் எதுவும் செய்யமுடியாதுள்ளதாக வவுனியா அரச அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் இதனால் தமது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு தெரிவித்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், பொலிஸார் கல் அகழ்வுப் பணியை இடைநிறுத்துவதாக தெரிவித்ததுடன் குறித்த பகுதியையும் சென்று பார்வையிட்டனர்.

அதன் பின்னர், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடி, குளத்தின் அணைப்பகுதியை செப்பனிட்டுத் தருவதாக உறுதிமொழி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.