மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் குறித்த நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று புதன்கிழமை (20) மதியம் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் தொடர் அத்து மீறிய நடவடிக்கையினால் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக இந்திய மீனவர்களின் அத்த மீறிய வருகை மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எமது மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் மீன் பிடி வலைகளை கடலில் வைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
இதனால் மீனவர்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்திய மீனவர்கள் தற்போது மன்னார் கடற்பரப்பிற்குள் வந்து மீன் பிடித்துச் செல்கின்றனர்.
இதனால் மன்னார் மீனவர்கள் வெறும் கையுடன் கரை திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண் மீனவ தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மீனவர்களுக்கு மீன் பாடு குறைந்தால் பெண் தலைமைத்துவ மீனவ குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக பெண் தலைமைத்துவ மீனவ குடும்ப பெண்கள் கருவாட்டுக்கு மீன் வெட்டுதல்,வலையில் இருந்து மீன்களை அகற்றுதல் உள்ளிட்ட வேலைகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது கடலில் விடும் வலைகள் இந்திய மீனவர்களின் டோலர் படகுகளால் சேதமாக்கப்படுகின்றமை மற்றும் மீன் பாடு இல்லாத காரணங்களால் அவர்கள் தமது வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.
இலங்கை கடல் பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்துச் செல்லும் வரை கடற்படை கடலில் கிடந்து என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை எனவே இவ்விடத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்களாக வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களினால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.