ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர்.நிக் கிளெக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இதன்போது, இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துக்கூறினார்.
அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றக் குழு மீளாய்வின் போதும் இந்த சட்டமூலம் தொடர்பில் மேலதிக திருத்தங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறை மேம்பாட்டிற்கான இலங்கையின் திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.