‘டீன் ஏஜ்’ தற்கொலைகளை தடுக்க மனநல கல்வி திட்டம் அமல்படுத்தப்படுமா?

103 0

சமீபகாலமாக டீன் ஏஜ் வயதில் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021 அறிக்கையின்படி, பெரும்பாலான தற்கொலைகள் மகாராஷ்ட்ராவில் பதிவாகி உள்ளன. அங்கு 22,207 (13.5%) தற்கொலைகள், தமிழகத்தில் 18,925 (11.5%), மத்தியப் பிரதேசத்தில் 14,965 (9.1%), மேற்கு வங்கத்தில் 13,500 (8.2%) மற்றும் கர்நாடகாவில் 13,056 (8.0%) தற்கொலைகள் நடந்துள்ளன.

நாட்டில் 2021-ல் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு நாளும் 35-க்கும் அதிகமானோர் என்ற விகிதத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது 2020-ல் இருந்து 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 18 வயதுக்கு உட்பட்ட 10,732 பேர் தற்கொலை செய்ததில், 864 பேர் ‘தேர்வில் தோல்வி’ காரணமாக இறந்துள்ளனர். இதுகுறித்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ப.ராஜ சவுந்தரபாண்டியன் கூறியதாவது:

சமுதாயத்தில் இருந்துதனிமையாக இருத்தல், தற்கொலை பற்றி அதிகமாக பேச்சு,மரணம் பற்றி பேசுதல், தேவையில்லாமல் மாத்திரை, கத்தி போன்றவற்றை வாங்குதல், தூக்கத்தில் பிரச்சினை, சரியாக சாப்பிடாமல் இருப்பது, போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, செய்யும் வேலை அல்லது படிப்பில் பிரச்சினை, எப்போதும் ஒருவித பதற்றத்துடன் காணப்படுதல், எளிதில் எரிச்சலடைதல், மவுனமாக இருத்தல், குற்ற உணர்ச்சி, மனநல பாதிப்பு, நம்பிக்கை இல்லாமல் பேசுவது, தற்கொலை முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டவர்கள் போன்றவை,தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணிகள் ஆகும்.

டீன் ஏஜ் தற்கொலையைத் தடுப்பதில் பெரிய தடையாக இருப்பது மனநல பிரச்சினைகளை பற்றிய தவறான எண்ணம். பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் சமூகம்ஆகியோர் மனநலம் பற்றிய வெளிப்படையான உரையாடல்களை ஊக்குவிக்கும் சூழலை வளர்க்க வேண்டும். உதவியை நாடுவது மன வலிமையின் அடையாளம், பலவீனம் அல்ல என்பதை மாணவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.

டீன் ஏஜ் பருவத்தினர் கல்விசார்ந்த மன அழுத்தம் மட்டுமில்லாது சமூக அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினை வரை அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் செயல்பாடுகளில் இருந்து விலகுதல், நடத்தையில் திடீர் மாற்றம் மற்றும்நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அதற்கான தீர்வை கண்டறிந்து உதவ வேண்டும். ஒரு வலுவான ஆதரவு தளத்தைஉருவாக்குவது டீன் ஏஜ் வயதினருக்கு முக்கியம்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தீவிர கவனம்செலுத்த வேண்டும். அவர்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். மேலும் அவர்களின் கவலைகளை பகிர்ந்துகொள்ள பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும். பள்ளிகள் மற்றும் சமூகங்கள் ஆலோசனை சேவை மற்றும் மனநல கல்வித் திட்டங்களை வழங்க வேண்டும். டீன் ஏஜ் பருவத்தினர் நெருக்கடியில் இருக்கும்போது யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

அது ஒரு அமைப்பாகவோ, மனநலத் துறை சார்ந்தவராகவோ அல்லது நம்பிக்கை உள்ள ஒரு பெரிய மனிதராகவோ இருக்கலாம். பதின்ம வயதினருக்கு சமாளிக்கும் திறன் மற்றும் மீள் தன்மையை கற்பிப்பது தற்கொலை தடுப்புக்கான மற்றொரு முக்கிய அம்சமாகும். எந்த பதின்ம வயதினரும் தனியாகவோ அல்லது உதவியின்றியோ இருப்பதை உணராமல் பார்த்து கொள்வது சமூகத்தில் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.