நாட்டின் பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை,மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. புலனாய்வு பிரிவினர் பலவீனமடைந்து விட்டார்கள் என்றால் திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவு வீழ்ச்சியடைந்துள்ளதா? அல்லது ஆட்சியாளர்கள் அடவாடிகளுக்கு துணைபோகின்றனரா? என்ற கேள்விகள் எழுகின்றன.
அதாவது கடந்த 17ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தியாக தீபம் திலீபனின் ஊர்தியில் செல்லும் போது பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மிகவும் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவ்விடத்தில் இருந்த பொலிஸ்,இராணுவத்தினர் ஏன் இந்த தாக்குதுலை தடுக்கவில்லை என்ற கேள்விகள் உள்ளன. இது தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பில் கண்டனங்கள் உள்ளன. இதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்கின்றேன்.இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இத வேண்டும். இல்லையேல் இதன் தொடர்ச்சி மிகவும் மோசமாக இருக்கும். இன்னும் தாக்குதல்கள் அதிகரிக்கும்.
பொதுமக்களின் பாதுகாப்பு தற்போது பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பகிரங்கமாகவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை,மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை.அனுராதபுரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்னவை இலக்குப்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதனை யார் நடத்தினர், அவர்களிடம் துப்பாக்கி வந்தது என்ற கேள்விக்கு பொலிஸ் பாதுகாப்பு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
இலங்கையின் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்திருக்க வேண்டும் அல்லது ஆட்சியாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டும்.
இதில் ஒன்றுதான் சரியாக இருக்க வேண்டும். உங்களிடம் புலனாய்வாளர்கள் இல்லையென்றால் புலனாய்வாளர்களை உங்களுக்கு தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மிகவும் திறமையானவர்கள் உள்ளனர். இரண்டு மூன்று நாட்களில் இந்த விடயத்தை யார், எதற்காக செய்தனர் என்பதனை கண்டறியும் புலனாய்வாளர்கள் உள்ளனர்.
எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எங்கள் மீதும் துப்பாக்கி சூட்டை நடத்தி நாங்கள் இறந்தால் அதை கண்டுபிடிக்க முடியாத நிலையே உள்ளது.
இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி மன்னார் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்று வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னால் இருந்தவர்கள் யார் இருந்தனர் என்று தெரிந்தாலும் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த துப்பாக்கி யாருடையது. ஏன் இதனை ஆட்சியாளர்கள் தாமதப்படுத்த வேண்டும்.
அரசியல் பண பலம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? . குற்றச்செயல்களை தடுக்கவிட்டால் பாதுகாப்பு தரப்பு மீது மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றார்.