ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தாக்குதலில் ஈடுபட்டவர்களே மறைக்கின்றனர்!

79 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை பரிசீலனைக்காக எதிர்க்கட்சித் தலைவரால் கோரப்பட்ட போதிலும், அந்த கோரிக்கையை புறக்கணித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் வழங்கப்பட்ட கட்டளைகளையே தற்போதைய அரசாங்கமும் நடைமுறைப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட அந்த பகுதிகளை பரிசீலிக்க வாய்ப்பு வழங்கப்படாததால், தனது பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாரிய கொலைகளும் அனர்த்தங்களும் இடம்பெற்று உயிர்கள் பலியாகி இன்றும் உண்மையான யதார்த்தத்தை நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அறியாத வேளையில், இதன் காரணமாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரிக்குள்ள உரிமையும் கூட மீறப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளரின் மேற்பார்வையின் கீழ் அந்த ஆவணங்களை அணுகலாம் என்று கூறுவது நியாயமற்றது என்றும்,தொடர்ந்தும் சாட்சியக் குறிப்புகள் மற்றும் சாட்சியங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் மறைக்காமல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவதற்கு முன்பாக அந்த பகுதிகளை பரிசீலிப்பதற்கும் பெற்றுக்கொள்ளவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், அவ்வாறு செய்யாமல் மறைத்து விட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட கைகளில் இரத்தம் தோய்ந்தவர்கள் தான் இவ்வாறு மறைப்பவர்கள் என்று தெரியவரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய அரசாங்கம் வழங்கிய கட்டளைகளை இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்துவது தவறு என்றும், இந்த அறிக்கைகள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மறைக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.