பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

87 0

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன மீதான துப்பாக்கி பிரயோகம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி. சபையில் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன துப்பாக்கி பிரயோகத்துக்கு ஆளாகி மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

அதேபோன்று திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிலரால் தாக்கப்பட்டு  உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.

அதனால் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அத்துடன் வே. இராதாகிருஷ்ணன் எம்.பி குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் மற்றும்  தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும்போது அவரை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளும் அவரை பாதுகாக்க தவறி இருக்கின்றனர். அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கிறது.

இது எமது நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் இதுதொடர்பாக முறையான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு்ம் என்றார்.