இணையம் மூலம் இடம்பெறும் துணை சேவைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் வழிகள் மூலம் இடம் பெறும் துணை சேவைகள் ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் திடீரென ஒழுங்குபடுத்தப்பட்டால் சமூக ஊடக சந்தை எமது நாட்டை விட்டு வெளியேறும் என்றும், அவ்வாறு நடந்தால் அதனை நம்பியுள்ள பல தொழில்கள் வீழ்ச்சியடையும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் தேர்ந்தெடுத்த ஒரு குழு மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது நாட்டை வட கொரியாவுக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும் என்றும், எனவே, முகநூல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த எடுக்கும் முயற்சிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை கூட மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் தொடர்பில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் செவ்வாய்க்கிழமை (19) கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை என்றாலும் தற்போதைய அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளின் ஊடாக அதனை மட்டுப்படுத்த செயற்பட்டு வருகின்றது என்றும், அதன் ஒரு நடவடிக்கையாக, அரசாங்கம் சமூக ஊடகங்களில் மக்கள் வெளியிடும் கருத்துக்களை கட்டுப்படுத்தி அரசாங்கத்திற்கு பாதகமான தகவல்களை குற்றச் செயலாக கருதி தண்டிக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் அரசாங்கம் செய்த தவறான செயல்களை சரி செய்து கொள்ளவும், நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததும் நாட்டின் முற்போக்கு மக்களே என்றும், அந்த மக்கள் போராட்டத்துக்குப் பிறகு, மக்களின் ஆசியுடன் இதுவரை ஆட்சி அமைக்கப்படவில்லை என்றும், மக்கள் கருத்துக்கு பயந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்துள்ள வேளையில் மக்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கான அனைத்து வழிகளையும் மூடுவதற்கு தயாராகி வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையான இதை, எதிர்கட்சியால் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் ஒழுங்குப் பத்திரத்திரத்திற்கு பரிந்துரைத்ததையடுத்து, நிகழ் நிலைக் காப்பு தொடர்பான புதிய சட்ட மூல வரைவை அரசாங்கம் நேற்றிரவு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி தெரிந்துள்ளாரா என்ற பிரச்சினை உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் தொடர்பில் அரசாங்கத்திடம் பல கேள்விகளை முன்வைத்தார்.