மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்த கலிபோர்னிய பெண்

95 0

மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார்.

அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும்.

சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.