ஜெனிவா செல்கிறது கஜேந்திரகுமார் அணி

156 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக பதிலளித்ததுடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உறுப்புநாடுகளின் உரைகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன. அதன்படி, நாளை மறுதினம் செவ்வாய்கிழமை (19) வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறும்.

இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள், அச்சம்பவங்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டல், இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்படும்.

இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

அங்கு இடம்பெறவுள்ள சந்திப்புக்கள் குறித்து இன்னமும் உறுதியாகத் தீர்மானிக்கப்படாத போதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள், இணையனுசரணை நாடுகள் மற்றும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்புக்களை நடாத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.