செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் என்கிறார் உதய கம்மன்பில

86 0

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதே. இவ்வாறான பின்னணியில் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விடுதலை புலிகள் அமைப்பினரின் நோக்கங்களுக்காக உயிர் தியாகம் செய்த திலீபனை நினைவு கூரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு ஊர்தி பவனியில் செல்லும் போது சிங்களவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

திலீபன் என்பவர் இந்த நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்.

விடுதலை புலிகளின் நோக்கத்துக்காகவே தனது உயிரை திலீபன் தியாகம் செய்தார். விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான வாகனத்தில் திலீபனின் உருவப்படத்தை வைத்து கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணம் நோக்கி வாகன பவனியில் செல்வதற்கு யார் அனுமதி வழங்கியது.

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் உருவபடத்தை சுமந்து பொது இடத்தில் பகிரங்கமாக செல்வதற்கு அரச அதிகாரி அனுமதி வழங்கியிருந்தால் அவர் அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை முழுமையாக மீறி பிரிவினைவாதத்துக்கு அனுசரனை வழங்கியுள்ளதாக கருத வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அரச அதிகாரி செயற்படுவதற்கு அரசியல்வாதியொருவர் அழுத்தம் பிரயோகித்திருந்தால் உடனடியாக அந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டு அரசியலமைப்பின் 157(அ) பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும்.

சாதாரண சிங்கள சமூகத்தினரை இலக்காக கொண்டு விடுதலை புலிகள் அமைப்பு 300 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.பிரிவினைவாத தாக்குதலால் ஒட்டுமொத்த சிங்கள சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்களவர்கள் தமது உறவுகளை இழந்துள்ளார்கள்.

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதே. இவ்வாறான பின்னணியில் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சியாகும்.

2007ஆம் ஆண்டு 57 ஆவது இலக்கத்தின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவுக்கு அமைய இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளும் தண்டனைக்குரிய குற்றமாகும். அ

த்துடன் அவை பாரதூரமான குற்றச்சாட்டாக கருதப்படுவதால் தான் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா  கஜேந்திரன்  அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை மீறியுள்ளார்,மறுபுறம சர்வதேச  அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியுள்ளார். ஆகவே இவ்விரண்டு காரணிகளையும் முன்னிலைப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பில் எவரும் முறைப்பாடளிக்கவில்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு எதிராக நாங்கள் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிப்போம் என்றார்.