தாராபுரம் பாடசாலையின் புதிய அதிபர் நியமனத்தை எதிர்த்து பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

105 0

மன்னார் வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தாரபுரம் மன்/அல்மினா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதேநேரம் அதிபர் தகுதியை பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்துகொண்ட தாராபுரம் கிராமத்தை சேர்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரி அப்பகுதி மக்களால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் தாராபுரம் அல்மினா பாடசாலைக்கு முன் பகுதியில் உள்ள வீதியில் காலை 7.45 தொடக்கம் 8.30 மணிவரை ஊர்மக்கள் பலர் இணைந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த அதிபர் நியமனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈட்பட்டனர்.

குறிப்பாக மன்/அல்மினா பாடசாலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெறுபேறுகள் தொடர்சியாக சரிவு நிலையில் காணப்படுவதாகவும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் தங்களது பதவி காலம் நிறைவடைந்தும் பாடசாலையின் நிர்வாகத்தில் இருந்து விலகாதிருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

அதே நேரம் புதிய அதிபர் நியமனத்திலும் பதவி காலம் நிறைவடைந்தும் நிர்வாகத்தில் இருக்கும் பழையமாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின்  தலையீடு காரணமாகவே தகுதி வாய்ந்த தங்கள் கிராமத்தை சேர்ந்த அதிபர் நியமிக்கப்படவில்லை எனவும்

இது தொடர்பில் தாங்கள் எழுத்து மூல மகஜர் ஒன்றினை உயர் அதிகாரிகளுக்கு கையளித்ததாகவும் குறித்த மகஜர் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே குறித்த பிரச்சினையில் மன்னார் வலய கல்வி பணிமனை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  தலையீடு செய்து தாரபுர மக்களின் விருப்பத்தின் படி  தமது கிராமத்திற்கு தமது கிராமத்தை சேர்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஆண், பெண் இருபாலாரும் என இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர் ‘வராதே வராதே! பெற்றோர்கள் வெறுக்கும் அதிபரே வராதே’, ‘புதிய அதிபரே, உன்னை எடுத்தவரே உன்னை உதைப்பார்கள்’, ‘குளத்தடி கோமாளிகளே எம் விதியை தீர்மானிப்பது நீயா?’, ‘எங்கள் ஊர் அதிபர் எமக்கு வேண்டும்’, ‘ஏழை மாணவர்களின் கல்வியை அழிக்காதே’ போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்த பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பத்து வருடங்களாக இப்பாடசாலையில் கல்வி மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. இதற்கு காரணம், சரியான தலைமைத்துவம் கொண்ட அதிபரோ அல்லது பிரதி அதிபரோ இப்பாடசாலைக்கு நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக இங்கு நன்றாக படிக்கும் பிள்ளைகள் இப்பாடசாலையை விட்டு விலகி மன்னார் நகர் பாடசாலையை நோக்கிச் செல்லும் நிலை காணப்படுகிறது.

இங்குள்ள மாணவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர்தர அடைவுக்குச் செல்லும்போது இவர்களின் தராதரம் குறைவடைந்து  செல்கின்றன.

எங்கள் ஊரில் காலாவதியான சமூக அமைப்புக்கள் அதாவது பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் அமைப்பு, பள்ளி நிர்வாகமாக இருக்கலாம்… இவர்கள் தொடர்ந்து இயங்கி வருவதால் தாங்கள் தான்தோன்றித்தனமாக இருந்து செயற்படுவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.