‘வெறுப்பு பேச்சுக்கு’ எதிராக குழுவும் அமைக்கவில்லை, வழக்கும் பதியவில்லை

113 0

வெறுப்பு பேச்சுக்கு எதிராக மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். மாநில அரசுகளே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்ற உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உதாசீனப்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெறுப்பு பேச்சுகளுக்கு சர்வதேச சட்ட வரையறை எதுவுமில்லை என்றாலும், பேச்சு, எழுத்து, நடத்தைமூலமாக ஒரு நபர் அல்லது ஒருகுறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மதம், இனம், மொழி, நிறம்,ஜாதி, வம்சாவளி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்தி, தாக்கிப் பேசுவது வெறுப்பு பேச்சாகப் பார்க்கப்படுகிறது.

சில நேரங்களில் வெறுப்பு பேச்சுகள் சமூகத்தின் பொதுஅமைதிக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவித்து, பயங்கரவாதம், இனப்படுகொலை போன்றவற்றுக்கும் அச்சாரமிட்டு விடுகிறது.

அண்மையில் மணிப்பூர் மற்றும் ஹரியானாவில் கலவரங்கள் ஏற்பட்டதற்கு வெறுப்பு பேச்சே முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் திராவிடம் மற்றும் இந்துத்வா கொள்கைகளை மையப்படுத்தி பேசப்படும் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள் அரசியல் களத்தை அவ்வப்போது சூடேற்றி வருகின்றன.

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை: வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஏப்ரல்மாதம் பிறப்பித்துள்ள ஓர் உத்தரவில், ‘‘வெறுப்பு பேச்சு கடுமையான குற்றம். இது தொடர்பாக யாரும் புகார் தரவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டினால், அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றமே தக்க நடவடிக்கை எடுக்க நேரிடும்” என எச்சரித்திருந்தது.

மேலும், வெறுப்பு பேச்சுகளைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குழு அமைத்து, ஒரு கண்காணிப்பு அதிகாரியை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். மத்திய அரசு இதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

எனினும், நாடு முழுவதும் வெறுப்பு பேச்சுகள் தொடர்கின்றன. மாநில அரசுகள் தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்யவில்லை. தடுப்பதற்காக குழுவும் அமைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்கூறியதாவது: சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கண்ணியம் தவறாமல் பேசும் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் தவறல்ல. ஆனால், பொதுவெளியில் சிலரது பேச்சுகள், சாதி,மதம் மற்றும் அரசியல் ரீதியிலானமோதல்களுக்குக் காரணமாகி விடுகின்றன. கருத்து சுதந்திரம் என்பதற்கான வரையறை எது என்பதையும், வெறுப்பு பேச்சுக்கான வரையறை எது என்பதையும் முதலில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக கட்டமைப்பு செய்து பிரித்துப் பார்க்க வேண்டும்.

தனிப்பட்ட ஒருவரின் அல்லதுஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பினரின் மத, இன, மொழி ரீதியிலான உணர்வைத் தூண்டி, மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கேவலமாக பேசினாலோ அல்லது ஒழித்துக் கட்ட வேண்டும் என்றோ அல்லது ஒருவரது தலையை வெட்டிக் கொண்டு வந்தால் பரிசு என்றோ வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி, சட்டம் – ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தினால் அது வெறுப்பு பேச்சு.

நல்லிணக்கம் அவசியம்: இதுபோல பேசும் நபர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தல் நேரங்களில் மக்கள்பிரதிநிதித்துவ சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கலாம். சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், நல்லுறவும் அவசியம். அனைத்து சமூகங்களுமே பொறுப்பாக செயல்பட வேண்டும்.

வெறுப்பு பேச்சுகளால் வன்முறை அல்லது மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.

எனினும், 130 கோடி பேர் கொண்டஇந்தியாவில், உச்ச நீதிமன்றமே நேரடியாக களத்தில் குதித்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

130 கோடி பேர் கொண்ட இந்தியாவில், உச்ச நீதிமன்றமே நேரடியாக களத்தில் குதித்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது சாத்தியமற்றது.