மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னாள் துணை வேந்தர் இ.பால குருசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த விஸ்வகர்மா திட்டம், நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கைத் தொழில் புரிவோர், கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. இந்த சிறப்பு மிக்க திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இது நாட்டில் 18 வகையான பாரம்பரிய கைத் தொழில்கள், கைவினைக் கலைகளில் ஈடுபடும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேம்பட உதவிகரமாக இருக்கும். இது தவிர, விஸ்வகர்மா திட்டத்தில் கைவினைஞர்களும், கைத் தொழில் கலைஞர்களும் வெறும் 5 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெற முடியும்.
இந்த திட்டத்துக்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்குகிறது. எனினும், இதை சிறப்பாக செயல்படுத்துவதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். ஆனால், பிரதமர் மோடி மீதான எதிர்ப்பை முன்வைத்து திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பது வருத்தமான விஷயமாகும்.
சாமானிய மக்களுக்கு பயன்: மேலும், இந்த திட்டத்தையும் 1950-ம் ஆண்டுகளில் ராஜாஜி அறிமுகம் செய்த தொழிற் கல்வி திட்டத்தையும் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. இதன் மூலம் தமிழகத்தின் கைவினைஞர்கள், கைத்தொழில் புரிபவர்களுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காமல் போய் விடும். சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் இத்தகைய திட்டத்தையும் அமல்படுத்த தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.