சஞ்சீவவை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

128 0

பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றசெயல்களுடன் தொடர்புடையவருமான கனேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமாரவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  தெரிவித்தார்.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவருமான   கனேமுல்ல சஞ்சீவ நேபாளம், காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கடந்த வியாழக்கிழமை (14) கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி வருகை தந்த போது கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும்  சந்தேகநபர் வழங்கிய ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர் போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வருகை தந்துள்ளமையை கண்டறிந்துள்ளனர். அந்த கடவுச்சீட்டில் சேனாதிரகே கருணாரத்ன  என்ற பெயர் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைய அவர் கனேமுல்ல சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கனேமுல்ல சஞ்சீவ இந்தியாவுக்கு சென்று அங்கிருந்து நேபாளத்துக்கு குடியேறியுள்ளதாகவும்  இதன்போதே போலி கடவுச்சீட்டை பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் பல்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ,கொலை, கொள்ளை, தாக்குதல் சம்பவங்கள், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிலுவைகளில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரான சஞ்சீவ குமாரவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.